
கோலாலம்பூர்,டிச12: 2025ஆம் ஆண்டுக்கான செயல்குழு நிலையிலான விவாதத்தின் போது தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கே.ஆர்.டிக்கு வெ.5ஒ மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவை ஒவ்வொரு கே.ஆர்.டிக்கும் வெ.6000 என்னும் நிலையில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறியிருந்த நிலையில் அந்த மானியம் போதுமானதா என்னும் கேள்வி எழும் அதேவேளையில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக தேசிய ஒருமைப்பாட்டின் பின்னணியில் உள்ளுர் சமூகத்திற்கு உண்மையிலேயே நன்மை பயக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வருடத்திற்கு வெ.6,000 ஒதுக்கீடு போதுமானதா என ஆராயும் அதேவேளையில் இந்தத் தொகை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இதை வருடத்திற்கு வெ.10,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கிறேன் என்றார்.இந்த அதிக ஒதுக்கீட்டின் மூலம், தேசிய ஒருமைப்பாட்டின் இலக்குக்கு உண்மையிலேயே பங்களிக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெ.5,000 ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு பயனுள்ள திட்டங்களை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் தனது ஆலோசனையை முன் வைத்தார்.
இந்த உதவித்தொகையை அதிகரிப்பதற்காக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நிதியமைச்சிடம் தொடர்ச்சியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருவதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியை தாம் முழுமையாக ஆதரிக்கிறேன், ஏனெனில் சமூக மட்டத்தில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படும் ஒரு முக்கியமான அடிமட்ட அமைப்பின் பங்கை கே,ஆர்.டி வகிக்கிறது என்றார்.
சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் கே.ஆர்.டி- இன் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது, குறிப்பாக மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகத்தின் சூழலில். எனவே, KRT ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படுவதே பொருத்தமானது, இதனால் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டின் விரும்பிய இலக்கை அடைய அதிக மூலோபாய, பொருத்தமான மற்றும் உயர் தாக்க திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் அவர் தனது கருத்தினை பதிவு செய்தார்.

