
பத்துகாஜா,டிச12: அல்-தௌஃபிகியா ஆரம்ப சமயப் பாடசாலை நீண்டக்காலமாக எதிர்நோக்கியிருந்த கால்வாய் சிக்கலுக்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால் தீர்வு பிறந்துள்ளது.
அச்சமயப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கருதப்பட்ட சம்மதப்பட்ட கால்வாயை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் மாண்புமிகு சிவகுமார் அதனை சீரமைத்து முறையான நீரோட்டம் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் துரித நடவடிக்கையினை அவர் மேற்கொண்டார்.
சம்மதப்பட்ட கால்வாயை பார்வையிட்ட பின்னர் சுமார் ஒரு வாரக் காலகட்டத்தில் அச்சிக்கலுக்கு தீர்வு காணபட்டுள்ள நிலையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையம் நனிச் சிறந்த சேவையையும் பங்களிப்பையும் நிறைவாக செய்து வருவதாகவும் சிவகுமார் மேலும் கூறினார்.
அதுமட்டுமின்றி,கல்வி சார்ந்த அல்லது பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தாம் உடனடியாக களமிறங்குவதாகவும் நன்முறையில் ஆராய்ந்து அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தீவிர முனைப்பும் காட்டுவதாக கூறிய சிவகுமார் மாணவர்களின் நலன்,கல்வி மேம்பாடு மற்றும் வளர்ச்சியானது தனது முதன்மை குறிக்கோள் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில்,இப்பள்ளி எதிர்நோக்கிய சிக்கல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு வாரத்தில் தீர்வு ஏற்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.மிக விரைந்து தீர்வை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் நல்லதொரு சூழலை ஏற்படுத்திய மாண்புமிகு சிவகுமார் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் நன்றியும் பதிவு செய்தனர்.
மேலும்,மாண்புமிகு சிவகுமார் மக்கள் பிரதிநிதியாக இங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டது முதல் இனம்,மொழி,சமயம் கடந்து எல்லாருக்கும் நன் சேவையை வழங்குகிறார்.குறிப்பாக பள்ளிக்கூடம்,கல்வி சார்ந்த விவகாரங்களில் அவரின் சேவையும் பங்களிப்பும் தனித்துவமானது என்றும் அச்சமயப்பள்ளி பொறுப்பாளர்கள் நன்றியோடு நினைவுக்கூர்ந்தனர்.

