தெராத்தாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் தமிழ் நாட்காட்டி வெளியீடு!

ஷா ஆலம், டிச. 18- தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் யூ ஜியா ஹோர் ஏற்பாட்டில் தொகுதியிலுள்ள இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக தமிழ் நாட்காட்டி (காலண்டர்) வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய விழாக்கள், விஷேச நாட்கள், சுபமுகூர்த்த தினங்கள், அரசாங்க பொது விடுமுறைகள் உள்ளிட்ட தகவல்களை இந்த தமிழ் நாட்காட்டி உள்ளடக்கியுள்ளதாக தெராத்தாய் தொகுதி இந்திய சமூகத் தலைவர் கி.சரஸ்வதி கூறினார்.

தாம் முன்வைத்த பிரத்தியேக கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் யூ ஜியா ஹோர் தொகுதி இந்தியர்களுக்காக 500 நாட்காட்டிகளை அச்சிட்டு உள்ளதாக அவர் சொன்னார்.

இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக தமிழ் நாள்காட்டியை வெளியிட்ட முதல் தொகுதியாக தெராத்தாய் விளங்குவதாகக் கூறிய அவர், தங்கள் கோரிக்கையை ஏற்று இந்த நாள் காட்டியை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

இந்த நாள்காட்டிகள் தொகுதியிலுள்ள 11 ஆலயங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், இந்திய வர்த்தக மையங்கள் மற்றும் தொகுதி மக்களிடம் இலவசமாக விநியோகிக்கப்படும்.

மேலும் தொகுதி சேவை மையத்திற்கு வரும் பொது மக்களிடமும் இந்த நாள்காட்டிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles