

ஈப்போ,டிச31: வருங்காலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களின் கல்வி பயணத்தின் ஓர் அங்கமாக செயல்படவும் தொடங்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை முயற்சிக்கு தாம் வெ.20 ஆயிரம் வழங்குவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் உறுதி அளித்தார்.
முத்தமிழ் பாவலர் மன்றத்தின் இம்முயற்சியினை தாம் வெகுவாக பாராட்டுவதாகவும் கூறிய அவர் அம்மன்றத்தின் இச்செயல்பாடு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் நமது பண்பாட்டை நம்பிக்கையான தடத்தில் பயணிக்க வைக்கும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.
அறக்கட்டளை அமைக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கும் முத்தமிழ் பாவலர் மன்றம் அன்மையில் ஏற்பாடு செய்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சிவகுமார் இதனை குறிப்பிட்டார்.
மேலும்,அம்மன்றம் தனது கல்வி அறக்கட்டளை அமைக்க வெ.30 ஆயிரத்தை கொண்டிருக்கும் நிலையில் தமிழ் கல்வி,பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பங்களிப்பாகவே வெ.20 ஆயிரத்தை தாம் வழங்குவதாக தனதுரையில் அவர் குறிப்பிட்டார்.
மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பல்வகஒ சார்ந்த மக்கள் வருகை புரிந்திருந்த நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தால் வருங்காலத்தில் அவர்களுக்கும் இனம்,மொழி உணர்வோடு தமிழ்ப்பள்ளி மீதான அக்கறையையும் விதைத்திருக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கினார் சிவகுமார்.
அதேவேளையில்,உலகம் நவீனத்துவத்தை நோக்கி ஆக்கப்பூர்வமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நம்மவர்களும் டிஜிட்டல் உலகில் வலுவான ஆளுமையை கொண்டிருக்க வேண்டும்.மேலும்,நாளைய உலகை ஆளப்போகின்ற செயற்கை நுண்ணறிவிலும் நம் கவனம் திரும்ப வேண்டும் என்றார்.
சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மன்றத்தின் அமைப்புத் தலைவர் டாக்டர் அருள் ஆறுமுகம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும்,மன்றம் தொடர்ந்து கல்வி,கலை,பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் தீவிர முனைப்பு காட்டி வருவதோடு நம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க கல்வி அறக்கட்டளை அமைக்கும் நடவடிக்கையில் முனைப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழுக்கு மகுடம் சூட்டும் வகையில் அமைந்திருந்த இவ்விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் ஆளுமை கொண்டுள்ள பலருக்கு விருது வழங்கி சிறப்பிக்கவும் பட்டது குறிப்பிடத்தக்கது.

