

பெருவாஸ்,டிச31: பொது அமைப்புகளும் இயக்கங்களும் முன்னெடுக்கும் தமிழ்ச் சார்ந்த பெருவிழாக்களில் தமிழ்ப்பள்ளிகளின் பங்கெடுப்பு மிகவும் அவசியமானது என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறு நிகழும் போதுதான் தமிழ் சார்ந்தும் தமிழறிஞர்கள் சார்ந்தும் மட்டுமின்றி நமது அடையாளமாய் உயர்ந்து நிற்கும் பெருவிழாக்களும் அதன் உன்னதங்களும் அடுத்த தலைமுறை நோக்கியும் ஆக்கப்பூர்வமாக நகரும் என்றார்.
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக் “நாம் நற்பணி இயக்கம்” நடத்தி வரும் பாரதியார் பெருவிழாவில் உரையாற்றும் போது இதனை வலியுறுத்திய அவர் இவ்வட்டாரத்தின் 15 தமிழ்ப்பள்ளிகளும் இனி வருங்காலங்களில் இவ்விழாவில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பாரதியாரின் 142வது நினைவுநாளில் “நல்லதோர் வீணை செய்தே” பாரதியார் இலக்கியப் பெருவிழாவை நாம் நற்பணி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவ்வியகத்தின் செயல்பாட்டையும் ஆக்கப்பூர்வப்பணிகளை பாராட்டிய அவர் அதன் தலைவர் திரு.தங்கராஜ் அவர்களையும் வெகுவாக பாராட்டினார்.
பாரதி பார் போற்றும் கவிஞன் மட்டுமில்லை.அவன் நம்மினத்தின் பெரும் அடையாளம்.பெண்ணியமும் சாதிய தீண்டாமையையும் எதிர்த்த முற்போக்குவாதி.உலக கவிஞர்களில் என்றைக்கும் தனக்கான நிலையான இடத்தை நிரப்பி சென்ற மகாகவி அவன்.அத்தகைய சிறப்பிற்குரிய மகாகவி பாரதியை போற்றுவதும் அவருக்காக விழா எடுப்பதும் காலத்தில் நாம் செய்யும் பெரும் கடமை என்றும் தமதுரையில் தினகரன் நினைவுறுத்தினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பாரதியை போற்றியும் அவன் தமிழ்ப்பணி குறித்தும் விரிவுரையாளர் தமிழ்மாறன் பேசுகையில் பாரதியின் கவிதை தொடங்கி பாரதியின் வாழ்வையும் போராட்டங்களையும் அழகாய் எடுத்துரைத்தார்.பாரதியை நாம் ஏன் போற்ற வேண்டும்,பாரதி யார் என்பதையும் உணர்த்தும் வகையில் அவரது பேருரை தனித்துவமாய் அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இவர்களோடு தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி அவருடைய உரையும் இடம் பெற்றிருந்த நிலையில் மாணவர்களின் கவிதை ஒப்புவிப்பு உட்பட பல்வேறு அங்கங்களும் பாரதியை நினைவுக்கூறும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது

