
மாலிம் நாவார், ஜன 7-
ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் கல்வி மகத்தான பயணத்தை கொண்டது.நம் வாழ்வின் முதல் வெற்றிக்கூட கல்வியை கற்பதிலிருந்துதான் தொடங்குகிறது.கல்வி மனிதவாழ்வில் இன்றியமையாதது.
எல்லாருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு இந்நாட்டில் இருக்கும் பட்சத்தில் நம் வீட்டுப்பிள்ளைகள் கல்வியை தொடர்வதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதி செய்தல் வேண்டும் எனவும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி நினைவுறுத்தினார்.
மழலையர் தொடங்கி தங்களின் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி ஒவ்வொருவரும் பயணிக்க கல்வி அவசியமானது என்பதை உணர்ந்தே அரசாங்கம் தொடர்ந்து கல்வி வாய்ப்புகளை நன்நிலையில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் அவர் விவரித்தார்.
சங்காட் டின் பாலர்பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பரிசளிப்பு விழாவில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மழலையர் கல்வியை தொடங்கி முதலாம் ஆண்டில் கால் பதிக்கப்போகும் சுமார் 21 மாணவர்கள் தங்களின் கல்வியை நன்நிலையில் தொடர்ந்து நல்லதொரு எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்ட அவர் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலோடு பெற்றோர்களின் ஊக்கமும் வழிகாட்டலும் இம்மாணவர்களை சிறந்த தடம் நோக்கி இட்டுச் செல்லும் என்றும் தனதுரையில் அவர் கூறினார்.
முன்னதாக மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசளிப்பு விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

