
சுங்கைபட்டாணி, ஜூன் 27-
கெடா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய சிறு தொழில் முனைவோருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், வணிக தொடர்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
கெடா இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கம்(KICCI),தொழில் முனைவோர் மற்றும் கூட்டறவு மேம்பாட்டு அமைச்சகம்(MECD) ஆகியவற்றின் இணைப்பில் ‘முத்ரா-MAICCI நேரடி ரோட்ஷோ 2026’ எனும் நிகழ்வு இங்குள்ள பார்லி கார்டன் மண்டபத்தில் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் பல்வேறு நிதி மற்றும் வணிக ஏழு நிறுவனங்கள் இதில் பங்கேற்று , தொழில் வளர்ச்சி,நிதி உதவி திட்டங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
கெடா இந்திய வர்த்தக சங்கத்தின் துணைத்தலைவர் லோகநாதன் முனியாண்டி தனது நிகழ்வின் நிறைவு உரையில் கூறுகையில்,
“கெடா மாநில இந்திய தொழில் முனைவோருக்கு தேவையான ஆதரவை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமது உரையில் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்து பல தொழில் முனைவோருக்கு முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை.
அதனை சரிசெய்யும் வகையில், ஒரே இடத்தில் தொழில் முனைவோர்களையும் நிதி நிறுவனங்களையும் சந்திக்கச் செய்து, அவர்களின் தேவைகளை அறிந்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் முயற்சி வழிகாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பல தொழில் முனைவோர் முறையான கணக்கு வழக்குகளை பராமரிக்காமல் இருப்பதும், தேவையான வணிக ஆவணங்கள் இல்லாததும் கடனுதவி பெறுவதில் பெரும் தடையாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, 2026 ஆம் ஆண்டில் அதிகமான தொழில் முனைவோர் நிதி உதவிகளை பெறும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்” என்றார்.
இந்த முயற்சியின் மூலம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில் முனைவோரின் வணிக வளர்ச்சியை ஊக்குவித்து, பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு(MAICCI)தலைவர் டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயணசாமி கலந்து கொண்டு நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.

