
வாஷிங்டன்: ஜன 9-
‘நான் பதவியேற்கும் முன்பாக, காசாவில் உள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும்’ என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் மிரட்டி உள்ளார். அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
அதிபர் தேர்தலில் அவரது வெற்றியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோவில் செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார்.
காசாவில் ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளை, நான் பதவி ஏற்கும் முன்பாக விடுவிக்க வேண்டும். இவ்வளவு நாட்களும் பொறுமை காத்ததே அதிகம். இது ஹமாசுக்கு நல்லதல்ல.
உண்மையில் சொல்லப் போனால், யாருக்கும் நல்லதாக இருக்காது. இனி
எதையும் நான் சொல்வதற்கில்லை.
அவர்கள் எப்போதோ பணயக் கைதிகளை விடுவித்திருக்க வேண்டும். ஒருபோதும் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலை ஹமாஸ் நடத்தியிருக்கக் கூடாது. ஆனால் நடந்து விட்டது, பலர் கொல்லப்பட்டு விட்டார்கள்.
எனவே, காசாவில் ஹமாஸ் பிடியில் இருப்பவர்கள், இனியும் நீண்டகாலம் பணயக் கைதிகளாக இருக்க முடியாது.
இஸ்ரேலில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பலரும்
பணயக் கைதிகளை மீட்க வேண்டுமென கெஞ்சுகிறார்கள்.
தாய்மார்கள், தந்தைமார்கள் கதறுகிறார்கள். 20 வயது இளம்பெண்ணை முடியை பிடித்து இழுத்து, சாக்குமூட்டை போல காரில் ஏற்றிச் சென்றார்கள்.
அவர் கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வளவு கொடூரமாக அந்த பெண்ணை நடத்தியிருக்கிறார்கள். நான் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை.
ஆனால் இன்னும் 2 வாரம் இருக்கிறது. அதற்குள் அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும் என்று டிரம்ப் மிரட்டி உள்ளார்.
ராய்ட்டர்

