
புவனேஷ்வர் ஜன 10-
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார்.
இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல்முறையாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தினத்தையொட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட 70 நாடுகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மாமன்னர் அசோகர் போரை தவிர்த்து அமைதி பாதையை தேர்ந்தெடுத்தார்.
இந்த நேரத்தில் உலகத்துக்கு இந்தியா சில அறிவுரைகளை வழங்குகிறது.
உலக நாடுகள் யுத்தத்தை தவிர்த்து, புத்தரின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் உலகத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும்.
அதேவேளை விரைவில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட உள்ளோம்.பொதுமறையான திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக சிங்கப்பூரில் திருவள்ளூவர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் தமிழ் மொழியின் பெருமை மற்றும் தமிழ் கலாச்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

