
பத்துகாஜா,ஜன20 : வண்ணங்களால் மும்மொழியில் பொருத்தப்பட்டிருக்கும் பாப்பான் பாரூ பெயர் பலகை அந்த ஊருக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை.மாறாய்,அது மூவினத்தின் ஒற்றுமையையும் சுபிட்சமான வாழ்வியல் முறையையும் எடுத்துரைப்பதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவக்குமார் குறிப்பிட்டார்.
அந்நகரிம் மத்தியில் அந்நகரின் அடையாளத்தை ஏந்தி நிற்கும் இப்பெயர் பலகை மலாய்,சீனம் மற்றும் தமிழ் மொழியோடு நிமிர்ந்து நிற்பது இந்நகரின் தனித்துவத்தோடு இங்கு வாழும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கும் புரிந்துணர்விற்கும் சான்றாகவும் திகழ்வதாக அவர் மேலும் கூறினார்.
மேலும்,மலேசியா பல்லினம் வாழும் மக்களிடையே பெருமைமிகு பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள நிலையில் பல்லின மக்களின் தாய்மொழி காக்கப்படுவதில் இவையெல்லாம் நனிச் சிறந்த சான்றுகள் எனவும் தெரிவித்தார்.
அதேவேளையில்,மடானி அரசாங்கம் மக்களிடையே விதைக்கும் ஒற்றுமைக்கும் பலமான புரிந்துணர்வு,மலைசியர் என்னும் மேலோங்கிய உணர்வு ஆகியவற்றுக்கு சான்றாக திகழும் இம்மாதிரியான பெயர் பலகைகள் நாடேங்கும் விரிவாக்கம் காணப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பெயர் பலகையை அமைப்பதில் பத்து காஜா ஜசெக மற்றும் கம்போங் பாப்பான் கிராமத்து மேம்பாட்டு நிர்வாகம் ஆகியவை பெரும் முனைப்பு காட்டிய நிலையில் மும்மொழியில் அது அமைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியானது என்றார்.
விரைவில் கம்போங் பாப்பானில் சீனப்புத்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அந்த கிராமத்திற்கே புதியதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பெயர் பலகை அமைந்திருப்பது சிறப்பிற்குரியது என்றார்.

