


மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர், பிப் 3-
நூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க செந்தூல் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தமிழ் நாடு பிள்ளையார் பட்டி யைச் சேர்ந்த சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட இந்த மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தி வைத்தனர்
கடந்த 1893ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை நகரத்தார் கட்டி 1902 முதல் கும்பாபிஷேகம் செய்தார்கள்.
உலகப் போருக்கு முன்னைய காலக்கட்டத்தில் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தம், உலகப் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புப் பணி ஆகியவை காரணமாக மீண்டும் திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான வாய்ப்பினை 30-10-1961இல் தான் இறையருள் வழங்கியது.
இதனை அடுத்து 1.11.1971 இல் திருக்குட நன்னீராட்டு விழா சிறப்புற நடைபெற்றதை அடுத்து 8.6.1984இல் திருக்குட நன்னீராட்டு விழா
நடைபெற்றது. அதன் பின்னர் 9.2.1998 மற்றும் 1-2-2013 இல் திருக்குட நன்னீராட்டு விழா சீரும் சிறப்புடன் நடைபெற்றது.
இன்று ஏழாவது மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்ற வேளையில் 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெரும் அலையென திரண்டனர்.
காரியக்காரர் பி.எல்.சிதம்பரம்
செட்டியார், தலைவர் எஸ்.ஓ.கே.சிதம்பரம்
செட்டியார், ஆலயச் செயலாளர் மற்றும் பொருளாளர் எம்.மெய்யப்பன் செட்டியார் மற்றும் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, டத்தோ ஆர் இராமநாதன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் பரிபாலன சபா தலைவர் டத்தோ சுரேஷ்குமார், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், தமிழ் பத்திரிகையாளர்கள் , நகரத்தார் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.