தைப்பூசத்தில் குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள் மீது போலிசார் கடும் நடவடிக்கைகள் எடுப்பர்: சிவனேசன் எச்சரிக்கை

ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூச திருவிழாவில் சுமார் 3 முதல் 4 இலட்சம் பக்தர்களுடன் சுற்றுப்பயணிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இவ்வாண்டில் மதுபானம் அருந்திவிட்டு அராஜக செயலில் ஈடுபடும் நபர்களை போலீசார் தயவுதாட்சண்யமின்றி கைது செய்வார்கள் என்று பேராக் மாநில சுகாதாரம், ஒற்றுமை, மனிதவளம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் எச்சரித்தார்.

மதுபானம் அருந்திவிட்டு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் போலீஸ் தரப்பினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள். இவ்விவகாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்விவகாரத்தில்  யாருக்கும் உதவ மாட்டேன் என்று பேராக் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு தைப்பூச கூட்டத்தில் திட்டவட்டமாக அவர் கூறினார்.

தைப்பூச காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை போலீஸ் தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அதற்கான தீர்வு குறித்தும் அவர்கள் முறையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலை ஓரங்களில் அமைக்கப்படும் வியாபார கூடாரங்களை ஈப்போ மாநகர் மன்றம் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

ஆகையால், ஈப்போ மாநகர் மன்றத்திற்கு சென்று அனுமதி கடிதம் பெற்றுக்கொண்டு பின் தங்களின் வியாபார கூடாரங்களை அமைக்கும்படி  சிறுதொழில் வியாபாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இல்லையேல் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் ஆலயத்திற்கு வருகை மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனர். இருப்பினும், அவர்களின் குடும்பத்தார் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு உதவும் பொருட்டு ஆலய நிர்வாகத்தினர் சிறப்புக் குழுவை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலய வளாகத்தில் உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

தீயணைப்பு நீர் குழாய் பகுதிகளை தயவு செய்து காலியாக வைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆபத்து அவசர வேளைகளில் அந்த குழாய் நீரை திறப்பதற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படாது.

அதோடு, பக்தர்கள் தீ சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தீ சம்பவம் குறித்த ஏதேனும் தகவல் இருக்குமானால் தீயணைப்பு பாதுகாப்பு படை அல்லது போலீஸ் தரப்பினரை விரைவில் தொடர்புக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஈப்போ கல்லுமலை ஆலய வளாகத்தை துப்புரவு செய்து சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா.சீதா இராமன் கேட்டுக்கொண்டார்.

குப்பைகள் போடுவதற்கு அதிகமான எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்படும். ஆகவே, பக்தர்கள் குப்பைத் தொட்டிகளில் போடுவதற்கு ஏதுவாக அமையும் என்று அவர் கூறினார்.

கல்லுமலை ஆலயத்தை ஒட்டியிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து சிறு பிள்ளைகள் அல்லது சிறார்கள் காவடி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் 10 ல், புந்தோங் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து காலை மணி 6.00 க்கு இரதம் புறப்பட்டு சுமார் காலை 11.30 மணியளவில் கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை வந்தடையும் என்று அவர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles