வெ.26 லட்சம் ஊழல் தொடர்பில் ‘டத்தோ‘ உள்பட நால்வர் கைது- எம்.ஏ.சி.சி. அதிரடி

கோலாலம்பூர், பிப். 14 – நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 26 லட்சம்
வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் போலி பணக் கோரிக்கை
தொடர்பில் ‘டத்தோ‘ அந்தஸ்து கொண்ட நபர் உள்பட நால்வரை மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநரான அந்த டத்தோ மற்றொரு
நிறுவனத்தின் இயக்குநருடன் சேர்ந்து நில விற்பனை டெண்டரைப்
பெறுவதற்கு பிரதியுபகாரமாக கையூட்டு வழங்க முன்வந்ததாகக்
கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 50 முதல் 60 வயது வரையிலான இரு
நிறுவன இயக்குநர்கள், இரு மூத்த உதவித் தலைவர்களும் அடங்குவர்
என எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.

அந்த லஞ்சத் தொகை கிள்ளானில் நிலத்திற்கான டெண்டரைப்
பெறுவதற்காக மலேசியாவைத் தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம்
ஒன்றின் அதிகாரிக்கு வழங்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது.

நிறுவன இயக்குநர் டத்தோ அந்தஸ்து கொண்ட இயக்குநர் மற்றும் இரு
உதவித் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து போலியான ஆவணங்களைப்
பயன்படுத்தி நிறுவனத்திலிருந்து 26 லட்சம் வெள்ளியை மீட்டு மற்றொரு
நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக அந்த ஊழல் தடுப்பு
ஆணைய வட்டாரம் குறிப்பிட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles