
2025 கல்வி ஆண்டு நாளை தொடங்குகின்ற நிலையில் தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதன்முதலாக தொடங்குகின்ற நம் சமுதாய செல்வங்களுக்கு மஇகா சார்பில் பாராட்டும் வரவேற்பும் தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நம் சமுதாயத்தின் பண்பாட்டு, பாரம்பரிய அடையாளமாக விளங்குகின்ற தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோருக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கு கல்விசார் அடித்தளத்தை சிறப்பாக அமைக்க இருக்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்திய சமுதாயத்தினர் தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதன் தொடர்பில் பரந்த அளவில் பரப்புரை மேற்கொண்ட சமூக இயக்கங்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் இந்த வேளையில் மஇகா சார்பில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த மண்ணில் நம் சமுதாயத்திற்கு அரணாக விளங்கக்கூடிவை நம் தமிழ் பள்ளிகள்தான்.
தமிழ்ப் பள்ளிகளுக்கு அன்று முதல் இன்று வரை காவலனாகவும் பாதுகாப்பு கேடயமாகவும் விளங்கக்கூடிய இயக்கம் மஇகா என்பதை நாடறியும்.
அதைப்போல தமிழ்ப் பள்ளிகளின் பாதுகாப்பு, மறு உருமாற்றம், புதிய பள்ளிகளுக்கான கட்டுமானம் ஆகியவற்றுக்கு மஇகா தன் பங்களிப்பை இடையறாது வழங்கி வருகிறது.
இத்தகைய கடமையில் மஇகா தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
அதற்கு ஏற்ப பெற்றோரும் தம் பங்கை உரிய முறையில் ஆற்ற வேண்டும் என்பது மஇகாவின் எண்ணம் என்பதை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் டான்ஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

