
1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்தவர் இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீத். போரில் 8 பாகிஸ்தான் பீரங்கிகளை அழித்த அப்துல் ஹமீத் 9வது பீரங்கியை தாக்கும்போது வீரமரணமடைந்தார். பரம் வீர் சகாரா பெற்றவர் இவர்.
உத்தரப் பிரதேசம் காஜிபூர் அருகே ஜகானியன் தாலுகாவின் கீழ் உள்ள தாமுபூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். அங்கு இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு, பள்ளியில் பெயிண்ட் அடித்தபோது, பள்ளியின் பெயரை “பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி” என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர். இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கல்வித் துறை அதிகரிகள், சுவரின் ஹமீத்தின் பெயரை எழுதி அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
இருப்பினும், ஹமீத்தின் பேரன் ஜமீல் அகமது, இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். “தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு போர் வீரரின் பெயரை அழித்தது மன்னிக்க முடியாத தவறு” என்று அகமது கூறினார்.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 18) பள்ளியின் பெயர் பிரதான நுழைவாயிலில் ‘ஷாஹீத் வீர் அப்துல் ஹமீத் பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி’ என்று மாற்றப்பட்டுள்ளது.

