
கிள்ளான், பிப். 19 – இங்குள்ள தாமான் செந்தோசா நகரமாக அந்தஸ்து
பெறுவதன் மூலம் குற்றச்செயல் மிகுந்த பகுதி என்ற அவப்பெயரிலிருந்து
இக்குடியிருப்பு மீள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் நாட்டிலிலேயே அதிகம் குற்றச் செயல்கள் நிகழும்
பகுதியாக கருதப்பட்ட தாமான் செந்தோசா அந்த அவலத்திலிருந்து
விடுபடுவதற்கு இந்த அந்தஸ்து உயர்வு துணை புரியும் என்று அவர்
சொன்னார்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாமான் செந்தோசா
தற்போது குற்றச்செயல்களிலிருந்து விடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய
அவர், இச்சமூகத்தை சமூகப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இம்மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை தாமான் செந்தோசா நகர அந்தஸ்து
பெறுவதையொட்டி இங்குள்ள செந்தோசா சட்டமன்றத் தொகுதி சேவை
மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத்
தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தாமான் செந்தோசா
விளங்குகிறது. இங்குள்ள மக்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு வேலை
வாய்ப்பு மற்றும் வர்த்தகம் புரிவதற்கான உதவிகளை தொகுதி வாயிலாக
வழங்கி வருகிறோம் என்றார்..

