
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் பிப் 19-
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சீனா அசெம்பிளி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் உலக தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் உலகத் தாய்மொழி தினத்தை கல்வியமைச்சு அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும். அதே வேளையில் மாணவர்களின் பெற்றோர்களும் தாய்மொழிப் பற்றோடு இருக்க வேண்டும் என தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகத் தாய்மொழி தினம் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ் அறவாரியம், லிம் லியன் கியோக் கலாச்சார அறவாரியத்தால் தொடங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் தலைநகர் சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உலகத் தாய்மொழி தினம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் பல முக்கிய நிகழ்வுகளும் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
முன்னதாக கல்வியமைச்சின் அதிகாரப்பூர்வ விழாக்களில் ஒன்றாக உலகத் தாய்மொழி தினம் இடம் பெற வேண்டும்.
இதன் வாயிலாகவே தாய்மொழியைக் காக்க முடியும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் தமிழ் அறவாரியம் முன்வைப்பதாக அவர் கூறினார்.
மேலும் இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் புதிய மாணவர்கள் பதிவு சரிவு கண்டுள்ளது. இதற்கு காரணம் மாணவர்களில் பெற்றோர்களும் கூட என அவர் சொன்னார்.
தமிழ் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றால் முதலில் நமக்கு தமிழ்ப்பற்று இருக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் உட்பட நம் அரசியல்வாதிகளும் சமுதாய தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.
மொழி மீது பற்று வர வேண்டும் என்றால் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் நமது பங்கு அதிகம் இருக்க வேண்டும். இச்சிந்தனைக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் அவற்றில் இதுவும் அடங்கும்.
ஆகவே தயவு செய்து இது போன்ற மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று நம் மொழியையும் தமிழ்ப் பள்ளிகளையும் காப்பதற்கு புதிய சிந்தனைகளை பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

