மக்களவையில் தமிழ்ப் பள்ளிகள் நலன் தொட்டு பேசப்பட்டது; நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது

மக்களவையில் தமிழ்ப் பள்ளிகள் நலன் தொட்டு பேசப்பட்டது; பிற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நெடுநாள் சவால்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும், தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உடனடியாக களையப்பட வேண்டும் என்பதில் தாம் கவனம் செலுத்துவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தீர்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தாம் இந்தப் பிரச்சனையைக் களைய, குறிப்பிட்டத் தரப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்தியதாக இலக்கவியல் அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
அதோடு இது தனது கடமைகளில் ஒன்று எனவும், தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் புரிந்து அதற்கேற்ப உடனடித் தீர்வை எட்ட தாம் மேற்கொண்ட முயற்சிகளில் கல்வியமைச்சும், இதர அமைப்புகளும் தமக்கு துணை புரிந்ததை கோபிந் சுட்டினார்.
சுங்கை பாக்காப், பினாங்கு, ஜெராம் தோட்டம் பகாங் மற்றும் கத்தும்பா தோட்டம், கெடா மாநில தமிழ்ப்பள்ளிகள் நீண்ட காலமாக பல சவால்களை எதிர்நோக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கவியல் அமைச்சரின் துரித முயற்சியால், இந்தப் பள்ளிகளுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு எட்டும் என கூறி, ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் இலக்கவியல் அமைச்சரைப் பாராட்டினார். அதோடு நெடுநாட்களுக்குப் பிறகு, 3 தமிழ்பள்ளிகளுக்கான தீர்வு பிறந்திருப்பதாக ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதோடு தமிழ்ப்பள்ளிகளில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான செயற்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்குவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
இணைய பாதுகாப்பு தொடர்பாக, குறிப்பாக சமூக வலைத் தலங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்ப்பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் நடத்த மித்ரா இலக்கவியல் அமைச்சோடு கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளதை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்தத் திட்டதை தாம் வரவேற்பதாகவும் கோபிந் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles