
நாடு தழுவிய நிலையில் பலர் சமய சொற்பொழிவாளர் ஸம்ரி வினோத்துக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்துவரும் வேளையில் நேற்று மலேசிய முருக பக்தி பேரவையின் தலைவர் டாக்டர் ஜெயபாலன் ஈப்போ மாவட்ட காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இப்போலீஸ் புகார் குறித்து டாக்டர் ஜெயபாலன் கூறுகையில் ஸம்ரி வினோத் இந்து மதத்தையும் அதன் வழிபாடுகளையும் இழிவுப்படுத்தி பேசுவது இது முதல் முறை அல்ல. அவர் பல வருடங்களாக இந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகிறார்.
ஆனால் இந்து மதத்தை சார்ந்த நாமும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தபோதிலும் ஸம்ரி வினோத் மற்றும் ஒரு சில பொறுப்பற்ற நபர்கள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய வண்ணமே உள்ளனர்.
இஸ்லாம் மதம் என்றால் அமைதி ,அன்பு என்று பொருள் .அப்படிப்பட்ட உன்னத மதத்தை தழுவிய ஸம்ரி வினோத் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் இறையாண்மைக்கு பாதகத்தை விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஸம்ரி வினோத் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும் என்று ஈப்போ மாவட்ட காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்தபோது டாக்டர் வ.ஜெயபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

