
திருவள்ளூர்: “பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” என்று திமுக சார்பில் திருவள்ளூரில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருவள்ளூரில் திமுக சார்பில், மத்திய பாஜக அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ கண்டனப் பொதுக் கூட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, மரியாதைக்குரிய நவீன் பட்நாயக்கின் செயலாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் என்பதற்காக, பிரதமர் மோடியும் – உள்துறை அமைச்சரும் தமிழகத்தை எவ்வாறெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்? ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவியைத் தமிழகத்துக்கு திருடிச் சென்றுவிட்டார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கருவூலச் சாவி தொடர்பான விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிடுவோம் என்று பேசினார்களா? இல்லையா?
ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவிக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? பிரதமரும் – உள்துறை அமைச்சரும் செய்தது எவ்வளவு பெரிய அவதூறு? அங்கு ஆட்சி மாற்றம் நடந்து பாஜக ஆட்சிக்கு வந்து 5 மாசம் ஆகிவிட்டது, கருவூலச் சாவி எங்கே என்று ஒடிசா எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். தமிழர்களைத் திருடர்கள் என்று சொன்னதை வாபஸ் பெறுங்கள் என்று அந்த எம்.பி. சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அவையில் வாய்மூடி மவுனம் சாதித்திருக்கிறார்கள். இதுதான் அநாகரிகம்.
அநாகரிகம் பற்றிப் பேசும் தர்மேந்திர பிரதான் அவர்களே, எது நாகரிகம்? என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்கள் மாநிலத்தில் இருந்து வரியை வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? “தமிழ் பிடிக்கும், தமிழில் பேச முடியவில்லையே” என்று சொல்லிக் கொண்டே, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? தாய்மொழியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யாமல் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா?
குஜராத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால், அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும், தமிழகத்தில் பேரிடர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காடு நிதிகூட ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகாலமாக அதைக் கட்டாமல் ஏமாத்துவதுதான் நாகரிகமா? நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது? அநாகரிகத்தின் அடையாளமே நீங்கள்தான். அநாகரிகத்தையே அராஜகமாகப் பயன்படுத்துவது நீங்கள்தான். இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வதைவிட அராஜகம் இருக்க முடியுமா? என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

