கோயில் & மசூதி விவகாரம் ஒரு நிறைவுக்கு வந்தது – நாட்டின் ஒற்றுமையை மீண்டும் முன்னிருத்தியிருக்கிறார் மாண்புமிகு பிரதமர்

புத்ரா ஜெயா, மார்ச் 27-
ஏறக்குறைய ஓராண்டு காலமாக தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள கோயில் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை சம்பந்தப்பட்ட சிக்கலுக்கு இறுதியாக நியாயமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் ஆட்சியின் கீழ், அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் யாவும் முன்வந்து கடமைகள் ஆற்றி நாட்டின் சுபீட்சம் மற்றும் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியிருக்கின்றனர்.

இந்தத் தீர்வின் ஓர் அங்கமாக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) 4000 சதுர அடி நிலத்தைக் கோயில் நிர்வாகத்துக்கு வழங்கி இந்துக்களின் தேவைகள் தொடர்ந்து பேணப்படுவதை உறுதிபடுத்தியிருக்கிறது.

இன்று மஸ்ஜிட் இந்தியாவில் மஸ்ஜிட் மடானியின் அடிக்கல் நாட்டு விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இது சமூகங்களுக்கிடையிலான சுபீட்சத்தினைக் காட்டும் மற்றுமொரு மைல் கல்லாகும்.

இந்தப் பேச்சு வார்த்தைகளில் பிரதமரின் பிரதிநிதியாகச் செயல்பட்ட மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் அவர்கள், அது ஒரு இக்கட்டான சூழல் என்றாலும், அனைத்து தரப்பினரும் தங்களின் பொறுப்புகளை முழுமையாக உணர்ந்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு எந்த பாதிப்பும் வரா வண்ணம் திறம்பட செயல்பட்டனர் என தெரிவித்தார்.

“தொடக்கத்தில் இந்தப் பிரச்சனை ஒரு கோயிலுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்சனையாக இருந்தபோதிலும், அரசாங்கம் இதனை மெத்தனமாகக் கருதவில்லை.

ஏறக்குறைய ஒரு மாத காலமாக நானே நேரடியாகப் பேச்சுவார்த்தைக்குச் சென்று அரசாங்கத் தரப்பினர், DBKL, தனியார் நிறுவனம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஆகியோர் இந்தச் சிக்கலுக்கு அனைத்து தரப்பினருக்கும் நியாயமான ஒரு தீர்வைக் கொண்டுவருவதில் ஒன்றிணைந்து செயல்பட்டனர் என்பதை மேற்பார்வை செய்தேன்.

இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், எந்தவொரு இறுக்கமான சூழலும் ஏற்படாது நாட்டின் நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்படும் வகையில் வெற்றிகரமாக இச்சிக்கல் தீர்க்கப்பட்டது”.
பொறுப்பான தலைமைத்துவம் மற்றும் அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த ஆதரவுமே இந்த சுமூகமான தீர்வுக்கு வழி வகுத்தது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

“இன்றைய அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு பிரதமர் தனிப்பட்ட முறையில் கோயில் நிர்வாகத்துக்கும், DBKL, தனியார் நிறுவனம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் இந்தச் சிக்கலை நன்முறையில் தீர்ப்பதில் உதவியதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒன்றாக இணைந்து முரண் நிலையில் அல்லாது சுமூகமான விதத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சிக்கல்களைக் களைய முற்பட்டால் எத்தகைய சிக்கலையும் நிச்சயமாக நன்முறையில் தீர்த்துவிடலாம்”.
இருப்பினும், இந்தத் தீர்வை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு செயல்படக்கூடாது என திரு. சண்முகம் அவர்கள் நினைவூட்டினார்.

“இது மீண்டும் செயல்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரி கிடையாது.

நாம் நமது உரிமைகளை நிலைநிறுத்துவதில், சட்டத்துக்கு உட்பட்டு சரியான முறையில் செயல்பட வேண்டியது அவசியமாகும். இதுபோன்ற சிக்கல்கள் இனி எழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்புணர்வு மிக்க மக்களாக, எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாது, நமது உரிமைகள் மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட முறையான வழிமுறைகளைக் கையாள வேண்டும், அறிவுப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்”. என அவர் விளக்கப்படுத்தினார்.

நம் நாட்டின் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்த பாடுபடுமாறு கோரிக்கை எழுப்பி தனது அறிக்கையை நிறைவு செய்தார்.

“மலேசியா நமது மண், நம்முடைய நாடு. அதன் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டச் செய்வது நமது கடமையாகும். இன்று மட்டுமல்ல, தொடர்ந்து வரும் சந்ததிக்கும் இது பொருந்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles