
புதுடெல்லி: மார்ச் 27-
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தீவிற்கு ‘கைலாசா’ என்ற பெயரிட்டு, தனி ராஜ்யம் நடத்தி வருகிறார்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், அமேசான் காட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள 10 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை நிலத்தை அபகரிக்க நித்யானந்தா முயன்றுள்ளார்.
தனது சீடர்களை அனுப்பி அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்த பகுதியை ‘கைலாசா’ தீவின் மற்றொரு பிரிவாக அறிவிக்க முயன்றுள்ளனர்.
இந்த நிலம் 1,000 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த நிலத்தின் குத்தகை தொகை ஆண்டுக்கு ரூ.92 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி சொத்துகள் பதிவு செய்யப்பட்ட விவகாரம் பொலிவியா நாட்டு அரசுக்கு தெரியவந்தது.
அதையடுத்து இந்த சட்டவிரோத பரிவர்த்தனையை மேற்கொண்ட 20 நித்யானந்த பக்தர்களை பொலிவியாவில் இருந்து வெளியேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

