
சுபாங் ஜெயா, ஏப். 9 – புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தற்காலிக பயன்பாட்டிற்காக இதுவரை 140 கார்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஒரு மாதக் காலத்திற்கு கார்களை தற்காலிகமாக இரவல் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து 190 விண்ணப்பங்களைப் பெற்றதாகப் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
டான் சோங் நிறுவனம் வழங்கிய 30 கார்களை இன்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினோம். சார்ஜர் வசதி உள்ளவர்களுக்கு மூன்று மின்சாரக் கார்கள் (இ.வி.) வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் 60 கார்கள் இவ்வாரம் கட்டங் கட்டமாக வழங்கப்படும். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்களை இரவல் தந்து உதவிய அனைத்து
நிறுவனங்களுக்கும் மாநில அரசின் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் எல்.ஆர்.டி. இலகு ரயில் நிலையத்தில் டான் சோங் குழுமத்தின் கார்களை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.

