
காளிதாஸ் சுப்ரமணியம்
பிரிக்பீல்ட்ஸ், ஏப் 13-
எல்லா காலங்களிலும் மாணவர்களின் நலனையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாக கொண்டிருக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் இன்று மாணவர்களுக்கு பிரத்தியேகமாக AI கல்வி போதிக்க தொடங்கப்பட்டிருக்கிறது.
மலேசிய கூகுல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தங்களின் மாணவர்களின் எதிர்கால திட்டமாக இந்த AI கல்வி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது.
அதிகாரப்பூர்வ தொடக்க விழா இன்று காலை பிரிக்பீல்ட்ஸ் விவேகாநந்த இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் கூகுல் நிறுவன அதிகாரி ஃபைரூஸ் நடீரா ஸைனால் சிறப்பு அதிகாரியாக கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக AI கல்வியை தொடக்கி வைத்தார்.
உலகம் AI எனும் செயற்கை நுண்ணறிவு துறையில் பரிணாமம் பெற்று வளர்ந்து கொண்டே வருகிறது.
இந்த பரிணாம வளர்ச்சியில் நமது மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை துவங்கியிருப்பதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலைய நிர்வாக துணை இயக்குனர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

தற்போது ஸ்ரீ முருகன் கல்வி தலைமை நிலையத்தில் தொடங்கியிருக்கும் AI கல்வியை கட்டம் கட்டமாக அனைத்து ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திலும் போதிக்கப்படும் என்றும் சுரேன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த AI கல்வியை வழங்க ஸ்ரீ முருகன் நிலையம் தயாராக இருப்பதாகவும் அதற்கான முயற்களும் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் சொன்னார்.
நமது இந்திய மாணவர்களின் புதிய கல்வி புரட்சிக்கு உறுதுணையாக இருந்த மலேசிய கூகுள் கல்வி பிரிவு தலைவர் டேனியல் அஸீஸான், மற்றும் அப்பிரிவின் அதிகாரி ஃபைரூஸ் நடீரா ஸைனால் ஆகிய இருவருக்கும் சுரேன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

