சிலாங்கூர் பி.கே.ஆர். தொகுதித் தேர்தல்- ஆறு இந்தியர்கள் வெற்றி, மூவர் அதிர்ச்சித் தோல்வி!

ஷா ஆலம், ஏப் 14- கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (பி.கே.ஆர்.) சிலாங்கூர் மாநில தொகுதித் தேர்தலில் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் உள்பட ஆறு இந்தியர்கள் வெற்றி வாகை சூடினர்.

மாநிலத்திலுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் 9 இடங்கள் கடந்த முறை இந்தியர்கள் வசம் இருந்த வேளையில் தற்போது அது ஆறாக ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநிலத்தில்  தொகுதி நிலையில் இந்தியர்களின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கோத்தா ராஜா, சுங்கை பூலோ, கோல சிலாங்கூர், சுபாங், உலு சிலாங்கூர், உலு லங்காட்  ஆகிய ஆறு தொகுதிகளை இந்தியத் தலைவர்கள் தக்க வைத்துக் கொண்ட வேளையில் கோல லங்காட், பூச்சோங், பாங்கி ஆகிய தொகுதிகள் அவர்கள் வசமிருந்து நழுவின.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோத்தா ராஜா தொகுதியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி பெசாரின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் ஜி.குணராஜ் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இத்தேர்தலில் குணராஜூவுக்கு 4,643 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எம். மகேந்திரன் 1,615 வாக்குகள் பெற்றார்.

இத்தேர்தலில் போட்டியின்றி பெற்ற தொகுதித் தலைவர்களில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணனும் ஒருவராவார்.

உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் பதவிக்கு நடைபெற்ற மும்முனைப் போட்டியில் நடப்புத் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் 3,016 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உலு லங்காட் தொகுதியில் நடைபெற்ற நேரடிப் போட்டியில் இராஜன் முனுசாமி 1,845 வாக்குகள் பெற்று தொகுதியைக் கைப்பற்றினார்.

சுபாங் தொகுதியில் பிரவின் த/பெ முரளி 1,906 வாக்குகள் பெற்று தலைவர் பதவியைக் கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கே. சாமிநாதனுக்கு 844 வாக்குகள் கிடைத்தன.

கோல சிலாங்கூர் தொகுதியில் நடைபெற்ற ஆறு முனைப் போட்டியில் தொகுதியின் நடப்புத் தலைவரும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான தீபன் சுப்பிரமணியம் அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வி கண்டார். இத்தொகுதி தேர்தலில் எம்.சிவபாலன் 1,498 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேளையில் தீபனுக்கு 1,061 வாக்குகள் கிடைத்தன.

அதே போல், கோல லங்காட் தொகுதியின் நடப்புத் தலைவரான ஹரிதாஸ் ராமசாமி நான்கு முனைப் போட்டியில் தனது வெற்றியை நழுவ விட்டார். இத்தேர்தலில் 2,610 வாக்குகள் பெற்று  முகமது அபிக் முகமது துனிமான் வெற்றி பெற்ற நிலையில்  ஹரிதாசுக்கு 1,916 வாக்குகள் கிடைத்தன.

பாங்கி தொகுதியில் நடைபெற்ற நான்கு முனைப் போட்டியில்  நடப்பு தொகுதி தலைவரான ஜி. பால முரளி  தோல்வியைத் தழுவினார். பால முரளிக்கு 1,883 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட லிம் கிம் எங் 2,120  வாக்குகள்  பெற்றார்.

பூச்சோங் தொகுதியிலும்  எம்.அன்பரசு ஜய்ஹஸ்ரி ஜாபரிடம் தோல்வி கண்டார். அன்பரசுவுக்கு 930 வாக்குகளைப் பெற்ற  வேளையில் ஜய்ஹஸ்ரிக்கு 1,226 வாக்குகள் கிடைத்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles