
கோலாலம்பூர், ஏப்ரல் 14 – சீன அதிபர் ஜி ஜின் பிங் நாளை தொடங்கி மூன்று நாட்கள் மலேசியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் இப்பயணத்தை மேற்கொள்ளும் அதிபர் ஜி, ஏப்ரல் 15 முதல் 17 வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த வருகையின் போது ஜி ஜின் பிங் கிங்கிற்கு அரசாங்க வரவேற்பு விழா நல்கப்படும். அதனைத் தொடர்ந்து இஸ்தானா நெகாராவில் சுல்தான் இப்ராஹிமுடன் அதிபர் சந்திப்பு நடத்துவார்.
அதிபர் ஜி மற்றும் அவரது பேராளர் குழுவை கெளரவிக்கும் வகையில் சுல்தான் இப்ராஹிம் அரசு விருந்தையும் வழங்குவார்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கவும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அதிபர் ஜி சந்திக்க உள்ளார்.
இரு தலைவர்களும் பின்னர் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறிப்புகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
bernama

