இந்தியர்களை அதிக அளவில் ஜசெக- வில் சேர்ப்பேன்! உதவித் தலைவர் அருள்குமார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஏப்ரல் 15-
ஜசெக கட்சியில் அதிகமான இந்தியர்களை சேர்ப்பேன் என்று ஜசெக தேசிய உதவித் தலைவர் ஜெ.அருள்குமார் தெரிவித்தார்.

ஜசெக கட்சியில் அதிகமான இந்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நான் உட்பட இரண்டு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் சிலாங்கூர், பேராக், பினாங்கு மாநிலத்திலும் ஜசெக சார்பில் இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் ஜசெக கட்சியின் சார்பில் அதிகமான இந்தியர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்கள்.

காலங் காலமாக தேர்தலில் போட்டியிட அதிகமான இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கும் கட்சி ஜசெக என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் ஜசெக கட்சியில் அதிகமான இந்தியர்களை சேர்க்க பாடுபடுவேன். ஜசெக கட்சியில் அதிகமான இந்தியர்கள் சேர்ந்தால்தான் நமது பலமும் நிலையும் அதிகரிக்கும்.

நாம் வலுவுடன் இருந்தால் அடுத்து வரும் பொதுத் தேர்தல்களில் கூடுதலான இடங்கள் நமக்கு தானாக கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

அண்மையில் நடைபெற்ற ஜசெக கட்சி தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டேன்.

கட்சியில் முக்கியமான பதவியில் இருப்பதால் இந்தியர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று அவர் சொன்னார்.

இதனிடையே தற்போது இந்திய சமுதாயத்தின் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது என்பது உண்மைதான். இருப்பினும் கோவில், தமிழ்ப் பள்ளிகள், குடியுரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் இந்தியர்கள் ஆதரவு மீண்டும் பக்கத்தானுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்றார் அவர்.

இன்று ஜசெக தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles