
கோலாலம்பூர், ஏப்.14-
நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் மறைவை நாட்டிற்கு பெரும் இழப்பாகும் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வர்ணித்துள்ளார்.
அப்துல்லா இந்திய சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மேலும் அவரது அமைதியான, உன்னதமான ஆளுமை மறக்கப்படாது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
“சவாலான சகாப்தத்தில் நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்திய மிதமான தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லிணக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தை வழங்கிய ஒரு அரசியல்வாதியாக துன் அப்துல்லா தொடர்ந்து நினைவுகூறப்படுவார் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“நாட்டின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது, இந்திய சமூகத்தின் சூழலில், அவர் இந்த சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
“Pak LA”‘ என்றும் அழைக்கப்படும் 86 வயதான அப்துல்லா திங்கட்கிரமை இரவு 7.10 மணியளவில் கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (IJN) காலமானார்.
அந்த முன்னாள் பிரதமரின் மறைவை அவரது மருமகன் கைரி ஜமாலுடின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவில் உறுதிப்படுத்தினார்.
ஐந்தாவது பிரதமரான அப்துல்லா, துன் டாக்டர் மகாதிர் முகமது ராஜினாமா செய்த பின்னர் அக்டோபர் 31, 2003 பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய அப்துல்லா, ஏப்ரல் 2, 2009 அன்று ராஜினாமா செய்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் பதவியேற்றார்.
அப்துல்லாவின் அக்கறை, அவரது உள்ளடக்கிய அணுகுமுறை, நியாயமான கொள்கைகள் மற்றும் திறந்த மனதுடன் கேட்கும் விருப்பம் ஆகியவற்றிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
“துன் அப்துல்லாவின் குடும்பத்தினருக்கு மஇகா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. “அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் கூறினார்.

