கோல குபு பாருவில் மின்சுடலை நிர்மாணிப்பு பணி இரு மாதங்களில் தொடங்கும்

ஷா ஆலம், ஏப்.18 – கோல குபு பாருவில் இந்துக்களுக்காக மின்சுடலையை
நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் இரு மாதங்களில் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர்
தீர்வு காணப்பட வேண்டிய சில தொழில்நுட்ப விஷயங்கள் மீது தற்போது
கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சுமார் 17 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மின்சுடலையின் கட்டுமானப்
பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்படுவதாக
கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் எஸ்.
பாலச்சந்திரன் கூறினார்.

இந்த மின்சுடலையின் கட்டுமானப் பணிகள் தொடர்பிலான தொழில்நுட்ப
அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட சிறப்புக்
கூட்டத்தில் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ்,
ஆடசிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவின் சிறப்பு பிரதிநிதி நத்தின்ராஜ்,
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், நகராண்மைக் கழகத்
துறைத் தலைவர்கள், வடிகால் நீர்பாசனத் துறை, சுற்றுச்சூழல் இலாகா,
நிர்வாணா ஆசியா குரூப் பிரதிநிதிகள் ஆகியோருடன் தாமும் கலந்து
கொண்டதாக அவர் சொன்னார்.

கோல குபு பாரு சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தின் பொறுப்பில்
இருக்கும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான இந்து மயானத்தின் ஒரு
பகுதியில் இந்த மின்சுடலை அமைக்கப்படும் என்று பாலச்சந்திரன்
குறிப்பிட்டார்.

இரு தகன மேடைகளை அமைப்பதற்குரிய வசதியுடன் நிர்மாணிக்கப்படும்
இந்த மின்சுடலையில் தொடக்கக் கட்டமாக ஒரு தகனமேடை அமைக்கப்படும்.

தேவையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மற்றொரு தகன மேடையை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த மின்சுடலையைப் பராமரிக்கும் பொறுப்பினை ஆலய நிர்வாகமே
ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற கோல குபு பாரு இடைத்தேர்தலின்
போது இந்த மின்சுடலை நிர்மாணிப்பு தொடர்பான கோரிக்கையை தாங்கள்
தலைவர்களிடம் முன்வைத்ததன் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில
அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
என்று அவர் கூறினார்.

கோல குபு பாருவில் இந்துக்களுக்காக மின்சுடலையை அமைப்பதற்கு
நிர்வாணா ஆசியா குரூப் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் சைபுடின்
ஷாபி முகமது அண்மையில் கூறியிருந்தார்.

இந்த மின்சுடலையை அமைப்பதற்கு தேவைப்படும் 17 லட்சம் வெள்ளி
செலவினை நிர்வாணா ஆசியா குரூப் நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

thanks – selangor kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles