

பாங்கி, 5 ஜூன் 2026 – மலேசிய தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவப் பிரதிநிதித்துவச்சபையின் ஏற்பாட்டில் இயற்றமிழ் விழா 2026 கடந்த 5 ஜூன் 2026 அன்று மாலை 7.30 மணியளவில், மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஈபு சேன் கல்லூரியிலுள்ள சுத்திரா மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, மலேசிய தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவப் பிரதிநிதித்துவச்சபை முன்னெடுத்து வரும் இலக்கியப் பயணம் எனும் தமிழ் இலக்கிய முயற்சியின் 28-ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட தொகுப்பு நூல் வெளியீட்டு மற்றும் பரிசளிப்பு விழாவாக அமைந்தது. கடந்த 27 ஆண்டுகளாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான ஓர் அர்ப்பணிப்புமிக்க தளமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது.
இவ்வாண்டு இலக்கியப் பயணம், “மறக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள்” என்ற கருப்பொருளுடன் மார்ச் 2026 மாதத்தில் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்வின் கீழ், தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக புதிர்ப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளும், உயர்கல்விக்கூட மாணவர்களுக்காக கவிதை எழுதும் போட்டி மற்றும் சிறுகதை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டன.



அந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற போட்டிகளின் தொடர்ச்சியாக, அவற்றின் முடிவுகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 5 ஜூன் 2026 அன்று இயற்றமிழ் விழாவின் போது நடைபெற்றது. மொத்தமாக சுமார் 250 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று ஆதரவு வழங்கினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் இடம் பெற்றவருக்கு RM350 பணப்பரிசும், சிறுகதைப் போட்டியில் முதல் இடம் பெற்றவருக்கு RM700 பணப்பரிசும் வழங்கப்பட்டன. இதனுடன், மார்ச் மாதப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஏனைய மாணவர்களும் அவர்களது சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு நூலுக்கு “சிந்தனை சிறகுகள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நூல் 13 கவிதைகளையும் 18 சிறுகதைகளையும் உள்ளடக்கியுள்ளது. மாணவர்களின் படைப்பாற்றல், சமூகச் சிந்தனை, மொழிப்பற்று மற்றும் இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் சிறந்த படைப்புகளின் தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது.


இந்நூலை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான Dato’ Seri M. Saravanan அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய இந்திய காங்கிரஸ் தேசியப் பொருளாளரும் மலேசிய இந்து ஆலய மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையின் தலைவருமான Dato’ Sivakumar Nadarajah, மக்கள் முற்போக்கு கட்சியின் கல்விப் பிரிவுத் தலைவரும் BEYOND கல்விக்குழுவின் தலைவருமான Vignesh Krishnakumar மற்றும் மக்கள் நீதி கட்சியின் துணைச் செயலாளருமான Sivamalar Ganapathi ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தமது சிறப்புரையில் டத்தோ ஶ்ரீ சரavanan அவர்கள், பல்கலைக்கழக மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய முயற்சிகள் இளம் தலைமுறையினரின் மொழிப்பற்றையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர், மலேசிய இந்தியர்கள் வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் துறைகளிலும் மேலும் முன்னேற வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
நிகழ்வின் இறுதியில், இயற்றமிழ் விழாவின் தலைமை இயக்குநரான யோகராம் ஜெகநாதபிள்ளை நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆதரவாளர்கள், விருந்தினர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மாணவர்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும், இலக்கியப் பயணத்தின் நோக்கங்கள் எதிர்காலத்திலும் மேலும் விரிவடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் படைப்பாக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இயற்றமிழ் விழா 2026, இளம் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு, மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளின் உற்சாகமான பங்கேற்புடன் நடைபெற்ற இவ்விழா, தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.
வெளியீடு:
மலேசிய தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவப் பிரதிநிதித்துவச்சபை
தேதி: 5 ஜூன் 2026
இடம்: சுத்திரா மண்டபம், ஈபு சேன் கல்லூரி, மலேசிய தேசியப் பல்கலைக்கழகம்.

