தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் சிவநேசன் பெரும் பங்காற்றுகிறார் – ஊராட்சி மன்ற உறுப்பினர் புகழாரம்!

சுங்கை,ஏப்25: சுங்கை சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் அதன் மேம்பாட்டிலும் தனித்துவ அக்கறையும் பங்களிப்பும் செய்வதில் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிகுழு உறுப்பினருமான அ.சிவநேசன் பெரும் சேவையாளராக திகழ்வதாக தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.ப.ஜெயகுமார் புகழாரம் சூட்டினார்.

மேலும்,சுங்கை சட்டமன்றத்திற்குட்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுடன் அதன் செயல்பாடுகளையும் சாதனைகளையும் அவர் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக கண்காணிப்பதோடு அப்பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் ஆதரவையும் தொடர் வழங்கியும் வருகிறார்.மேலும்,அவரது எதிர்பார்ப்பெல்லாம்,தமிழ்ப்பள்ளிகள் ஒருபோதும் வெற்றிகளிலிருந்தும் சாதனைகளிலிருந்தும் பின்வாங்கி விடக்கூடாது என்பதுதான் என்றும் ஜெயகுமார் நினைவுறுத்தினார்.

பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 52வது ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தை மாண்புமிகு அ.சிவநேசனின் பிரதிநிதியாக தொடக்கி வைத்து பேசுகையில் ஜெயகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்,இப்பள்ளிக்கூடம் தோட்டப்புறப்பள்ளியாக இருந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை நிறைவளிக்கும் வகையில் உள்ளது.தூரத்திலிருந்தாலும் தமிழ்ப்பள்ளியில் தான் பிள்ளைகள் ஆரம்பக்கல்வியை தொடங்க வேண்டும் என இப்பள்ளியில் பிள்ளைகளை பதிவு செய்த பெற்றோர்களைப் பாராட்டிய அவர் இப்பள்ளியில் மாணவர்களை அதிகரிக்க ஆசிரியர்கள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் பாராட்டினார்.

அதேவேளையில்,ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவு மட்டுமின்றி பொது மக்களிடமும் பள்ளி நிர்வாகம் நல்லதோர் உறவினை கொண்டிருக்க வேண்டும்.எல்லா தரப்பும் நல்லதோர் புரிந்துணர்வோடு அணுக்கமான நபுறவை கொண்டிருந்தால் இப்பள்ளியின் எதிர்காலமும் மாணவர்களின் சாதனைகளையும் நனிச் சிறப்பாக அமையும் என்றார்.

மேலும்,கடந்தாண்டு இப்பள்ளிக்காக மாண்புமிகு சிவநேசன் வழங்கிய மானியம் நன்முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இப்பள்ளி மாணவர்களின் சாதனைகளும் வெற்றிகளும் பெருமிதமாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக,பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கா.குமுதா பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பெற்றோர்களும் நல்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் நிறைவாக இருப்பதாக கூறினார்.மேலும்,மாணவர்களின் கல்வி,செயல்பாடு உட்பட அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் கண்காணிப்பும் அவசியமென்றும் வலியுறுத்தினார்.

பள்ளியின் புதிய நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் தேசிய அளவிலான ஆக்கம் மற்றும் புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.அதுமட்டுமின்றி,ஆசிரியர் திரு.நா.யோகேஸ்வரன் செயற்கை நுண்ணறிவின் துணையோடு உருவாக்கியப் பள்ளிப்பாடலும் இந்நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles