
தாய்லாந்தில் ஆந்த்ராக்ஸ் நோய்த்தொற்று காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளது, இது பொது சுகாதார எச்சரிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
லாவோஸ் நாட்டின் எல்லையை ஒட்டிய, தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில் 53 வயது நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தினர். அதே மாகாணத்தில் மற்றொருவருக்கும் இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பச்சை இறைச்சியை உட்கொண்டதன் மூலம், குறைந்தது 638 பேர் இந்த கொடிய பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் பொது சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

