
ஈப்போ, மே. 6: 21ம் ஆண்டாக அனைத்துலக கோஜோ ரியோ ஈப்போ சிட்டி கராத்தே போட்டி இம்மாதம் 9 முதல் 11 தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டி ஈப்போ அரினா பேட்மிண்டன் அரங்கம், ஈப்போ மாநகர் விளையாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக குழு தலைவர் மாஸ்டர் கே. ஆனந்தன் கூறினார்.
இவ்வாண்டில் நடைபெறும் கராத்தே போட்டியில் அனைத்துலக ரீதியில் சுமார் 1700 கராத்தே விளையாட்டாளர்கள் 18 நாடுகளை பிரதிநிதித்து விளையாடவுள்ளனர். இவர்கள் இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், அமெரிக்கா, ஜெர்மன், ஆப்பிரிக்கா, செனகல், சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து, சுவிட்ஸ்லாந்து, ஐக்கிய அரபு சிற்றரசு( யு.ஏ.இ), தென்கொரியா, ஜப்பான், புருணை போன்ற நாடுகளிலிருந்து இங்கே விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அனைத்துலக விளையாட்டாளர்களுக்கு மே 9 ல், மாலை மணி 6.30 க்கு விருந்தளிப்பு நிகழ்ச்சி ஈப்போ தாமான் பெர்தாமா ஓய்.ஆர்.எஸ்.கே. மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த விருந்து நிகழ்வு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய கொன்வென்சன் கண்காட்சி துறை இயக்குநருமான வ.சிவகுமார் தலைமையில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் மே 10ல், காலை 10.00 மணிக்கு அனைத்துலக கராத்தே போட்டியை, ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவாட் லீ அதிகாரப்பூர்வமாக ஈப்போ பேட்மிண்டன் அரங்கில் தொடக்கி வைப்பார் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த அனைத்தலக கராத்தே போட்டியை மே 11ல், காலை மணி 10.00 க்கு நிறைவு செய்கிறார் பேராக் மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர் மேம்பாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் துவான் கைருடின் அபு ஹனிபா என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இந்த அனைத்துலக கராத்தே போட்டியை கண்டுகளிக்க பொதுமக்கள் அன்போடு அழைக்கப்படுகின்றனர். இப்போட்டியை இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று கராத்தே மாஸ்டர் கே. ஆனத்தன் மகிழ்ச்சியுடன் அறிவிப்பு செய்தார்.