
ஷா ஆலம், மே 7- கெஅடிலான் ராக்யாட் கட்சியின் துணைத் தலைவர்
பதவிக்கு போட்டியிட பரவலாக ஆதரவு கிடைத்துள்ள நிலையில் நுருள்
இஸ்ஸா அன்வார் கட்சிக்கு தனது மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக்
கொண்டுள்ளார்.
இருப்பினும், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதா? அல்லது
நடப்பிலுள்ள உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா?
என்பது குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது
தொடர்பில் கட்சியின் அடிமட்ட நிலையில் வெளியிடப்பட்ட கருத்துகளை
நான் மதிப்பதோடு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
நட்புறவான ஒத்துழைப்பு, பொருள்பொதிந்த மாற்றம் மற்றும் சீர்திருத்தம்
ஆகியவற்றை சமநிலைப்படுத்தி சிறப்பான முடிவை எடுப்பேன் என அவர்
குறிப்பிட்டார்.
பெர்மாத்தாங் பாவ் மற்றும் லெம்பா பந்தாய் தொகுதிகளின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான நுருள் சிலாங்கூர், பேராக், ஜோகூர், பகாங்,
மலாக்கா உள்ளிட்ட மாநிலப் பேராளர்களிடமிருந்து சிறப்பான ஆதரவைப்
பெற்றுள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர், உதவித் தலைவர் உள்ளிட்ட
உயர்பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மே 8ஆம் தேதி நள்ளிரவு
12.00 மணி தொடங்கி மறுநாள் மே 9 இரவு மணி 11.50 வரை நடைபெறும்.
இந்த பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே 23ஆம் தேதி நடைபெறும்.
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்
கொள்ள போட்டியிடவுள்ளதாக டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார். இப்பதவிக்கு ரபிஸி தவிர்த்து நுருள் இஸ்ஸா, டத்தோஸ்ரீ சைபுடின நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.