மாண்புமிகு நூருல் இசா மக்களின் குரலை மாபெரும் மேடைகளில் பிரதிபலிக்கும் தலைமைத்துவமிக்க மிகச்சிறந்த ஆளுமையாவார்!:- சண்முகம் மூக்கன் புகழாரம்

கோலாலம்பூர், மே 9-

நிலைத்தன்மையையும் ஒட்டுமொத்தமான மேம்பாட்டையும் நோக்கிப் பீடுநடை போடும் நாட்டின் அரசியல் போக்கில் மாண்புமிகு நூருல் இசா அன்வார் தலைமைத்துவமிக்க, புதுமைகளைக் கொண்டுவரக்கூடியவர் மட்டுமல்ல, மக்களின் எதிர்பார்ப்பை மாபெரும் மேடைகளில் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் மிகச்சிறந்த ஆளுமையுமாவார்.

இந்தியராகவும், மலேசிய பிரஜையாகவும், மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினராகவும், இந்திய மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் மாண்புமிகு பிரதமரோடு நெருங்கிப் பணியாற்றும் நிலையிலும் இருக்கும் நான், நூருல் இசா அவர்களின் செயல்பாடுகள் யாவும் மலேசிய மடானி கொள்கையில் அடிப்படையில், நீதியையும் சமத்துவமான முன்னேற்றத்தையும் முன்னிருத்தியே அமைந்துள்ளதைக் காண முடிகின்றது என பிரதமர் துறை அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

நூருல் இசா அவர்கள் மக்கள் நீதிக் கட்சியின் (PKR) துணைத்தலைவராக முன்மொழியப்பட்டிருப்பதானது நாட்டின் ஒற்றுமையை இன பாகுபாடின்றி  வலுப்படுத்தும்.

இது ஒட்டுமொத்தமான இந்தியர்களின்  மேம்பாட்டுக்கு வித்திடும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அவர் மேற்கொண்ட பணிகள் வாயிலாக இன பாகுபாடின்றி மக்கள் பல நன்மைகளைப் பெற்றனர். மக்களின் குறைகளை நன்கு அறிந்தவர் இவர், அதோடு நகர்புற மக்களின் கல்வி, ஏழ்மைநிலை மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் முதலான இடர்கள் குறித்தும் அவர் நன்கறிவார்.

தீவிரமான முக்கியத்துவம் வழங்கும் துறையாக விளங்குவது கல்வி மற்றும் நுட்பத் தொழிற்கல்வி எனும் (TVET)  கல்வி திட்டமாகும். இவரது இந்த அயரா முயற்சியானது, மாற்றுத் துறைகளில் தேவைப்படும் இந்திய மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்று சண்முகம் மூக்கன் கூறினார்.

தேவையான திறன்களைப் பயின்று வாழ்க்கையில் தங்களை உயர்த்திக்கொள்ள இவர்களுக்கு அரியதொரு வாய்ப்பாக இது விளங்குகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு அல்லாது சமுதாய முன்னேற்றம் மற்றும் சுய மரியாதையை மேம்படுத்துவதாகவும் இது அமைவது சிறப்பானதொன்று என்றார் அவர்.

நான் மக்கள் நீதிக் கட்சியின் (PKR) மாற்றங்களையும் ஏற்றங்களையும் 2008-ஆம் ஆண்டிலிருந்து பார்த்து வருகிறேன், ஆகவேதான் கட்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு நூருல் இசா ஒரு சிறந்த பிரதிநி என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். கொள்கைப் பிடிப்போடு ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான ஒரு பிரதிநிதியாக விளங்கும் இவரது செயல்பாடுகள் மக்களுக்கும் ஆட்சி முறைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை மிக்க தலைமைத்துவம், நீதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் போக்கு என இவரிடம் குடிகொண்டிருக்கும் போக்குகள் அரசியல் நிலைத்தன்மையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் நாட்டின் தலைமைத்துவத்துக்கு மிகவும் தேவையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, அனுபவம் மற்றும் கொள்கைகள் மட்டுமின்றி நேர்மையாகவும் பாகுபாடுகள் ஏதும் இன்றி மக்களின் நலன் காக்கும் போக்கோடு செயல்படும் மாண்புமிகு நூருல் இசா அவர்களின் தலைமைத்துவத்தை நன்கு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று  கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் சண்முகம் மூக்கன்  கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles