
ஷா ஆலம், மே 8- சிலாங்கூர் கால்பந்து நட்சத்திரம் ஃபைசால் ஹலிம்
மீது எரிதிராவகம் வீசப்பட்ட வழக்கை ‘மேல் நடவடிக்கை இல்லை‘
(என்.எஃப்.ஏ.) என போலீசார் வகைப்படுத்தியுள்ள நிலையில் அச்சம்பவம்
தொடர்பில் புதிய விசாரணையைத் தொடங்கும்படி காவல்துறையை
அவரின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் புதிதாக எந்த துப்பும் கிடைக்காத காரணத்தால் இந்த
முடிவு எடுக்கப்பட்டது என்று மெஸ்சர்ஸ் முகமது அஷ்ராப் அண்ட் கோ
வழக்கறிஞர் நிறுவனத்தின் பேச்சாளரான நிக் ஜரித் நிக் மோஸ்தாபா
கூறியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கு என்.எஃப்.ஏ. என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத் துறை
தலைவர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியிடப்பட்ட அந்த கடிதம்
காஜாங்கில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு பிப்ரவரி 20ஆம் தேதி
கிடைத்தது என்று அவர் சொன்னார்.
இந்த வழக்கில் சந்தேக நபர் யாரையும் தொடர்புபடுத்தக்கூடிய
வகையிலான எந்த ஆதாரத்தையும் அரச மலேசிய போலீஸ் படையால்
கண்டுபிடிக்க இயலவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவு குறித்து நாங்கள் மிகுந்த
அதிருப்தியடைந்துள்ளோம். அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து
விவாதிப்பதற்கு நாங்கள் ஃபைசாலை சந்திக்கவிருக்கிறோம் என்று அவரது
வழக்கறிஞர் குழு கூறியது.
இந்த வழக்கை மறுஆய்வு செய்வது மற்றும் மறுபடியும் திறப்பது
தொடர்பில் முறையீடு செய்வதற்காக ஃபைசாலின் வழக்கறிஞர் குழு
விரைவில் சட்டத் துறைத் தலைவர் டத்தே முகமது டுசுக்கி மொக்தாரை
சந்திக்கவுள்ளது.
இந்த வழக்கில் தங்களின் வழக்கறிஞர் குழு முழு ஒத்துழைப்பை
வழங்கிய போதிலும் இந்த வழக்கை மூடுவது தொடர்பான காவல்
துறையின் முடிவு குறித்து தாங்கள் மிகவும் வருத்தமடைவதாக நிக் ஜரித்
மற்றும் மற்றொரு பேச்சாளரான முகமது ஹைஜான் கூறினர்.
கடந்தாண்டு மே மாதம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பேரங்காடி ஒன்றில்
நடத்தப்பட்ட எரிதிராவக தாக்குதலில் ஃபைசால் நான்காம் டிகிரி
தீக்காயங்களுக்கு ஆளானார்.