
திருவண்ணாமலை: ஆடு மாடுகளுடன் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கூட்டணி பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று அண்ணாமலை விரக்தியுடன் பேட்டியளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: நான் சாதாரண தொண்டன். எனவே, கூட்டணி பற்றி என்னிடம் எதையும் கேட்காதீர்கள். நான் தனி மனிதன். விவசாயி. கட்சி கட்டுப்பாடுகளுக்குள் நான் பேச முடியாது. எந்த பதவியும் எனக்கு வேண்டாம். ஆடு மாடுகளுடன் இருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன்.
கோயில்களுக்கு செல்கிறேன். ஆசிரமங்களுக்கு சென்று தியானம் செய்கிறேன். தலைவர் பதவி சுமையில்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். வெளிநாடுகளுக்கு செல்கிறேன். புத்தகம் படிக்கிறேன். தேவையில்லாமல் வேறு பணிகளில் மாட்டிக்கொள்ளவில்லை குடும்பத்துடன் இருக்கிறேன். தொண்டனாக பணி செய்வேன். எனக்கு எந்த அதிகார பதவியும் தேவையில்லை. என்னை பதவி எனும் கூண்டுக்குள் அடைக்க வேண்டாம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.