
மே 18ம் நாள், தமிழர்களின் தேசிய துயர நாளாகவும், முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாள், ஈழத்தமிழர்களின் தாயக தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் (2009) நிகழ்ந்த துயரங்களையும், மனிதாபிமான நெறிகளுக்கு எதிரான குற்றங்களையும் நினைவுகூருகிறது.
(2009 வரலாற்று முடிவும் மனிதாபிமான நெருக்கடியும்)
இலங்கையின் வடக்கு-கிழக்கு கரையில் அமைந்த முள்ளிவாய்க்கால் கிராமத்தில், 2009 மே 18ம் அன்று ஈழப்போர் குருதி ஓலத்தில் முடிவுக்கு வந்தது.
இறுதிக் கட்டத்தில், ஆயுதமற்ற குடிமக்கள் மீது உலகின் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் (கொத்து குண்டுகள், பல்குழல் பீரங்கிகள்) பயன்படுத்தப்பட்டதாக அனைத்துலக அமைப்புகள் மற்றும் மனித உரிமை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போனதோடு, பாலியல் வன்முறை, ஒடுக்குமுறை உட்பட கடுமையான மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ளன.மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
(நீதிக்கான போராட்டமும் பன்னாட்டு அழைப்பும்)
16 ஆண்டுகள் கடந்தும், போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்பு குறித்து சட்டபூர்வமான நீதி வழங்கப்படவில்லை.

தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நிலங்கள், வாழ்வாதாரம் மீட்கப்படவும் இல்லை. இத்தகைய சூழலில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், சர்வதேச சமூகத்திடம் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
- இலங்கையில் திட்டமிட்டு நடந்தது இனப்படுகொலை என அங்கீகரிக்க வேண்டும்.
- போர்க்குற்றங்களுக்கு பொறுப்புள்ளவர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
- தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தனிதமிழீழம் பொது வாக்கெடுப்பு வழி ஐ.நா. வழிகாட்டுதலில் உருவாக்க வேண்டும்.
- என வலியுறுத்தி வருகின்றனர்.
(துக்க அனுசரிப்பு நினைவுகள்)
இந்த துயர நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழீழத்தில் மட்டுமின்றி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் அனுசரித்து வருகின்றனர் .
குறிப்பாக மே 17 இறுதிப் போர்க் காலத்தில் பட்டினி கிடந்தவர்களின் நினைவாக, இன்றும் உலகத் தமிழர்கள் விரதம் அல்லது எளிய உணவு (உப்பில்லா கஞ்சி) மேற்கொள்கின்றனர்.
மே 18ம் அன்று வீடுகளில் மாலை விளக்கேற்றி, கஞ்சி உண்ணும் சடங்கு நடத்தப்படுகிறது. அறுசுவை உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. பொது இடங்களில் மெளன ஊர்வலங்கள், பாடல்கள், கண்ணீர் நிகழ்வுகள், நினைவேந்தல்கள் நிகழ்த்தப்பட்டு, இழந்த உயிரிழப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் துயர நாள், தமிழினத்தின் தியாகங்களை நினைவுபடுத்துவதோடு, மானுடத்தின் அடக்குமுறை வரலாற்றுக்கு எதிரான எச்சரிக்கையாகவும் உள்ளது. நீதியும் சமாதானமும் நிலவும் எதிர்காலத்திற்கான தமிழர் எதிர்பார்ப்புகள் இன்றும் வலுவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழினத்தின் துயர நாளான இந்நாளை உணர்வோடு ஒன்றி நினைவு கூர்ந்து நிறைவு செய்ய வேண்டும்.
இந்நாள் நாம் அழுவதற்கு அல்ல..
மீண்டு மீண்டும் எழுவதற்கு..
ஆறாத வடு வலி வரியாக்கத்தில் :-
பாலமுருகன் வீராசாமி
சுங்கை சிப்புட்