தமிழ்ப் பள்ளிகளை மீட்டெடுக்கும் எனது முயற்சிக்கு துணை நிற்பவர் நூருல் இஸா! சண்முகம் மூக்கன் தகவல்

புத்ரா ஜெயா, மே 21-
நீண்டகாலமாக ‘புரோஜெக் சக்கிட்’ என வகைப்படுத்தப்பட்டிருந்த ஐந்து தமிழ்ப் பள்ளிகளை மீட்டெடுக்கும் தனது முயற்சிக்கு கெஅடிலான் உதவி தலைவர் நூருல் இஸா பெரும் ஆதரவை வழங்கியிருப்பதாக சண்முகம் மூக்கன் தெரிவித்தார் .

சிலாங்கூரிலுள்ள சீபீல்ட் மற்றும் பிரவுண்ஸ்டன் தமிழ்ப்பள்ளிகள், நெகிரி செம்பிலானிலுள்ள பெர்த்தாங் மற்றும் சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளிகள், பேராக்கிலுள்ள ஹீவுட் தமிழ்ப்பள்ளி ஆகியவையே அப்பள்ளிகள்.

“இதைத் தவிர்த்து தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்விக்காக ஒரு சிறப்புக் குழுவை நாங்கள் உருவாக்கினோம் “என்றார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரியான சண்முகம்.

இந்திய சமுதாயத்தினர் கல்வியில் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்ய திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினோம்.

பல ஒருங்கிணைந்த
முயற்சிகளுக்குப் பின்னர், பிரதமர் ஆறு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்கியதாக இவர் பெருமையோடு கூறினார்.

“இப்போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து நான், கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறேன். இந்த நிதி ஒதுக்கீடு சரியாகவும், வெளிப்படையானதாகவும், சமூகத்திற்கு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் வழங்கப்படும் என்பதை உறுதிசெய்கிறேன்” என்றார்.

இந்த நிதி, விரைவில் அதிகாரப்பூர்வமான முறையான பகிரப்பட்டு தமிழ்க்கல்வி வளர்ச்சியில் அபரிமிதமான மேம்பாட்டைக் கொண்டு வரும் என்றும் சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு, நான் பிரதமரின் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தபோது நூருல் இஸா அன்வாருடன் இணைந்து செயலாற்றத் தொடங்கினேன்.

இதன் ஒரு பகுதியாக கல்வி மற்றும் சமூக-பொருளாதாரம் மீதான முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்தேன். இதற்கு, பிரதமரின் இலக்குகளுடன் முழுமையாக ஒத்துழைக்கக்கூடிய ஒருவர் தேவை என்பதை உணர்ந்தேன்.

நூருல் இஸாவிடம் பிரதமரிடம் இருக்கும் அதே உறுதியான மனப்பாங்கைக் கண்டேன். யாரையும் பின்னுக்குத் தள்ளாத மனநிலையும், ஜாதி, மதம், அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்காத மனப்போக்கும் அவரிடம் கண்டேன். அவரது அக்கறை மேலோட்டமானதோ அல்லது தற்காலிகமானதோ அல்ல. அது ஆழமான சிந்தனை, நீண்டகால திட்டமிடல் மற்றும் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டது.

அவ்வகையில் தற்போதைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு 13ஆவது மலேசிய திட்டத்தில் இணைக்கக்கூடிய இந்தியர்களுக்கான ஒரு நீண்டகால செயல்திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மஸ்ஜிட் இந்தியா கோவில் விவகாரத்திற்குப் பிறகு கோவில்கள் மீது வந்த விமர்சனங்கள் மற்றும் இனவாத கருத்துகள் குறித்து அவர் உண்மையாகவே மிகுந்த கவலையைக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இது சமாதானமாகவும் மரியாதையுடனும் தீர்க்கப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். இந்தச் சிக்கலின் நீண்டகாலத் தீர்வுகளுக்கான முன்னெடுப்புகளை நாங்கள் இணைந்து தற்போது உருவாக்கி வருகிறோம் என்றார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நூருல் இஸாவுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவத்தில் அவரைப் பற்றி தான் அறிந்த நல்ல பண்புகள் இவை என்றார் சண்முகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles