

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 21-
நமது குரல் கேட்க வேண்டிய இடத்தில் கேட்கப்பட வேண்டும். அப்படி கேட்கப் பட்டால் மட்டுமே நமது சமுதாயத்திற்குரிய அனைத்தும் கட்டம் கட்டமாக கிடைக்கும் என்று கெ அடிலான் உதவித் தலைவர் தேர்தலில் களம்காணும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கெ அடிலான் கட்சியில் இன்னும் இரு நாட்களில் கட்சியின் உச்சமன்றம், தேசியப் பொறுபாளர்களுக்கான தேர்தல் இணையவழி நடைபெற இருக்கின்ற நிலையில், நேற்று கோலாலம்பூர் லேக் கார்டன் கிளாப்-இல் சிலாங்கூர் இந்திய நிருவாக அமைப்பின்(PEIS) சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

நாம், நம்மிடையிலும் நம்மைச் சுற்றிலும் நடைபெறுகின்ற குற்றம்-குறைகளை மட்டும் பேசிக் கொண்டு பிரிந்து நிற்பதைக் காட்டிலும் கண்ணில் தென்படும் நன்மையைப் பேசி, ஒருவருக்கொருவர் அரவணைத்து, நடக்கின்ற நல்லவற்றை முன்னிறுத்தி ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்று உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மித்ரா நிதி பரிவர்த்தனை குறித்து, தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தோம்..
அப்படி கேள்வி கேட்ட நம் கட்சியே ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இதுகுறித்த வெளிப்படைத் தன்மையோ, மித்ரா நிதி பரிவர்த்தனை குறித்தோ வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை.

இதுபோன்ற இன்னும் ஏராளமான விவகாரங்கள் குறித்து, தெரிய வேண்டிய இடத்திற்குத் தெரியவில்லை.
இந்திய சமுதாயத்திற்காகா குரலை எழுப்ப வேண்டியவர்கள் எழுப்புவதில்லை. இது சம்பந்தப்பட்டவர்களிடம் போய் சேரவில்லை.
இதனால்தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகாண இன்னும் இரு நாட்களில் நடைபெற இருக்கின்ற கெஅடிலான தேசிய தேர்தலில், தன்னை தேசிய உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி கெ அடிலான் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ந. சத்திய பிரகாஷ் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
தைரியமாக குரல் கொடுத்து இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்ற கூடிய தலைவர்களை தேர்வு செய்யுங்கள்.
அப்போதுதான் நமது சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்று அவர் சொன்னார்.
கெஅடிலான் கட்சித் தேர்தலில் இளைஞர்பிரிவு, மகளிர் பிரிவு, தேசிய உச்ச மன்றம், உதவித் தலைவர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டியிடுவோர் பேரளவில் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில், இந்திய சமுதாயத்தின், குறிப்பாக கெ அடிலான் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.
ஜோகூர் முதல் பேராக் மாநிலம் வரை கட்சியின் அனைத்துப் பிரிவினரும் திரண்டிருந்த இந்த எழுச்சிக் கூட்டத்தில் மலாய் வட்டாரத் தலைவர்களும் அணிதிரண்டு ஒற்றுமையின் வலிமையை எடுத்துக் காட்டினர்.
கெ அடிலான் மகளிர் பிரிவுக்குப் போட்டியிடும் தமிழ்ப் பெண்கள், உச்சமன்றத்திற்கு களம் காண்போர், இளைஞர் பிரிவு பொறுப்பிற்கு போட்டியிடுவோர் அனைவரும் தத்தம் நிலை, நிகழ்கால அரசியல் போக்கு ஆகியவற்றை எடுத்துக்கூறி தங்களுக்கு தனித் தனியே ஆதரவு திரட்டினர்.
ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி, கெஅடிலான் மகளிர் அணி உதவித் தலைவர் வழக்கறிஞர் சிவமலர், செபூத்தே கெஅடிலான் தொகுதி முன்னாள் தலைவர் அனிதா, கோலலங்காட் உஷா நந்தினி, கலைமுகிலன் உட்பட அதிகமான மகளிர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சத்யா பிரகாஷின் கரங்கள் வலுப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
கெஅடிலான் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப் பட்டனர்.
சிலாங்கூர் இந்திய நிர்வாக இயக்கத்தின் செயலாளர் உமா நந்தினி வரவேற்புரை யோடு இந்த நிகழ்வு தொடங்கியது.
டிரா மலேசிய தலைவர் டத்தோ சரவணன் சின்னப்பன் தமது உரையில் உலு சிலாங்கூர் தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கியிருக்கும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் அவர்கள் உதவித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

