அடித்தளத்தில் இருந்து மெல்ல உயர்வதுதான் உன்னதமானது! அனைவரின் குரலாக ஒலிப்பேன் -டாக்டர் சத்யா பிரகாஷ்

கெஅடிலான் கட்சியில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கட்சியின் அடித்தளத்தில் செயல்பட்டு, அதன்பின் மெல்லமாக உயர்ப்பதவியை எட்ட நினைப்பதுதான் சிறந்த வழி; அப்பொழுதுதான், கட்சியின் உறுப்பினர்கள், உயர்மட்ட தலைவர்கள், இடைப்பட்ட வட்டார-மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் எண்ணவோட்டத்தையும் நிலைப்பாட்டையும் அறிய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒருவரால்தான் மேல்மட்டத்தில் குரல்கொடுக்க முடியும்.

அத்தகைய தகுதியைத் தான் கொண்டிருப்பதாகக் கூறும் டாக்டர் சத்யா பிரகாஷ், உலு சிலாங்கூர் தொகுதித் தலைவராக மிகப்பெரும்பான்மை வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றபின், தற்பொழுது தேசிய உதவித் தலைவர் பொறுப்பிற்கு போட்டி இடுவதாகக் கூறுகிறார்.

கெ அடிலான் கட்சி அனைவருக்குமானது என்ற நிலையில், தான் இந்திய சமுதாயத்திற்காக உறுதியாகக் குரல் கொடுப்பேன் என்றார்.

அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க, இந்தக் கட்சித் தேர்தலைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை.

அதேவேளை குறைகளைப் பேசி, தேங்கி நிற்கவும் விரும்பவில்லை.

நிறைகளை கருத்தில் கொண்டு, அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்பும் தன்னை, கட்சியில் அதிகமானோர் விரும்புகின்றனர் என்பதால், உதவித் தலைவராக வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் டாக்டர் சத்யபிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

தான் வெற்றி பெற்றால், அனைவரின் குரலாக மேல்மட்டத்தில் ஒலிப்பதுடன் ஒரு பாலமாகவும் செயல்படுவேன்.

ஒரு மருத்துவர் என்னும் வகையில், மக்களின் உடல் நிலையை அறிவதைப்போல, கெ அடிலான் தேசிய துணைச் செயலாளர் என்பதால் கட்சியினரின் மனநிலையையும் அறிவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மூன்றாம் தரப்பினர் கட்டியமைக்கும் பொய்த் தகவலுக்கு இரையாகாமல், கட்சியின் எதிர்காலம், தலைமையின் வழிகாட்டல், கட்சியினரின் நலம், அனைவரையும் ஒன்றிணைத்து பயணிப்பது என்பதை அனைவரும் கருத்தில் கொண்டால், இந்தத் தேர்தலில் எத்தகையை முடிவை எடுக்க வேண்டும்.

யாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற உறுதியும் தெளிவும் உள்ளத்தில் உதிக்கும்.

கெஅடிலான் கட்சியில் பெரும்பான்மையினர் இத்தகைய தெளிவு பெற்றிருப்பதால், அவர்கள் இன்னும் இரு நாட்களில் அளிக்க இருக்கும் வாக்களிப்பின் மூலம் தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles