

ஈப்போ, மே.25: தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற உன்னத நோக்கம் அவசியமாகும்.அதன் அடிப்படையில் இவ்வாண்டு முத்தமிழ் விழா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கிற்கு முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் தேவையை முன்னிறுத்தி இந்த 27 ம் ஆண்டு ஈப்போ தமிழர் திருவிழா அமைந்துள்ளது என்று பேராக் மாநிலத் தமிழர் திருநாள் இயக்க தலைவர் கு.மாயமுத்து கூறினார்.
இவ்வாண்டு நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சுமார் 60 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் கலந்துக்கொண்டுள்ளன. அவற்றில் காலை மணி 9.00 க்கு மாணவர்களின் படைப்பு தொடங்கின. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணை புரிந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
காலையில் புந்தோங் அரசினர் தமிழ்ப் பள்ளியில் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, திருக்குறள் ஒப்புவித்தல், ஓரங்க நாடகம், பண்பாட்டு நடனப்போட்டி, எழுச்சிப்பாடல் போட்டி, பேச்சுப்போட்டி, ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி, பெற்றோர்களுக்கு பல்லாங்குழி விளையாட்டு போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி போன்றவைகள் சிறப்பாக நடந்தேறின என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மதிய உணவிற்கு பிறகு, எங்கலிகன் தேவாலய மண்டபத்தில் பேராக் தமிழர் திருநாள் இரண்டாம் கட்ட நிகழ்வு தொடங்கியது.இந்நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக மூவருக்கு தக்கார் சிறப்பு செய்யப்பட்டன. அவர்களில் க.அருள் ஆறுமுகம், முன்னாள் காவல்துறை அதிகாரியான இரா. உத்திராபதி மற்றும் எழுத்தாளர் சிவா லெனின். இவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய சேவையை கருத்தில் கொண்டு இந்த தக்கார் சிறப்பு வழங்கப்பட்டது.
இந்நாட்டில் தமிழர்கள் தங்கள் பிள்ளகளுக்கு தமிழ்மொழியில் பெயர் சூட்ட வேண்டும். அத்துடன், வீட்டில் தமிழ்மொழி பேசும் பண்பினை நடைமுறைபடுத்த வேண்டும் என்று பேராக் தமிழர் திருநாள் தோற்றுனர் வழக்கறிஞர் எம்.மதியழகன் தமதுரையில் கூறினார்.
இவ்வாண்டில் சுமார் 52 தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டிகளில் பங்குபெற்றனர். அதே வேளையில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிகொணர்ந்தனர். 1952 ம் ஆண்டில் தமிழ்வேள் கோ.சாரங்கபாணியால் உருவானது தமிழர் திருநாள். அதனைத் தொடர்ந்து பேராக் மாநில பல தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

