
கோலாலம்பூர், ஜூன் 17 – மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று காலமானார். அன்னாருக்கு வயது 76.
முன்னாள் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் இன்று காலை 8.00 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானதை மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
கடந்த 1949 மார்ச் 1ஆம் தேதி பினாங்கில் பிறந்த பழனிவேல், 1973 ஆம் ஆண்டு பூஜாங் பள்ளத்தாக்கு திட்டத்திற்கான தேசிய அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் 1977 ஏப்ரல் மாதம் மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தில் (பெர்னாமா) மூத்த பத்திரிகையாளராகச் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில் அவர் அந்த நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் பொருளாதார செய்திகளுக்கான ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1987 முதல் 1990 வரை அப்போது பொதுப்பணி அமைச்சராக இருந்த துன் எஸ். சாமிவேலுவின் பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1970களின் முற்பகுதியில் இருந்து மஇகா மூலம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 1990ல் முதல் முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
கடந்த 1990, 1995,1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் அவர் தோற்கடிக்கப்பட்டார். பின் 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
ஆரம்பத்தில் அவர் தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சர், மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர், தோட்டத் தொழில்கள், மூலப் பொருட்கள் துறை துணையமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
2011ஆம் ஆண்டு அவர் பிரதமர் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பு வகித்தார். மஇகா தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பின் அவர் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு மஇகாவுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

