இரவிலும் பகலிலும் மாறி மாறி ஏவுகணை வீசி தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் 4வது நாளாக மோதல்: யுத்தம் முடிவுக்கு வர எந்த அறிகுறியும் இல்லை

ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் 4வது நாளாக நேற்றும் நீடித்தது. இரவிலும் பகலிலும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன்களை ஏவி இரு நாட்டு ராணுவமும் நடத்திய தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த யுத்தம் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தற்போதைய சூழலில் இல்லை.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தலைமை கமாண்டர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஈரானும் நூற்றுக்கணக்கான சக்தி வாய்ந்த ஏவுகணைகள், டிரோன்களை ஏவி இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் இதுவரை 220 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதில் 75 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிடம் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்த போதிலும், ஈரானின் ஏவுகணைகள் நேற்று அதிகாலையில் டெல் அவிவ் நகரை தாக்கி உலுக்கின. மத்திய இஸ்ரேலிய நகரமான பெட்டா டிக்வாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் நாசமானது. பல குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன

கடந்த 4 நாள் தாக்குதலில் 370க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும் அதில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தினால் பதிலடியை நிறுத்த தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று முன்தினம் கூறியிருந்தார். ஆனால் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும்படியாக இல்லை. இதுனால் இந்த யுத்தம் தற்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நீடிக்கிறது

thanks- dinakaran

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles