
தஞ்சோங் துவாலாங், ஜூன் 17-
இங்குள்ள சீக்கியர் குடியிருப்பு பகுதியில் நீண்ட கால வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து மாளிம் நாவர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பவானி சாஷா நேரில் சென்று பார்வையிட்டார்.
பத்து காஜா மாவட்ட மற்றும் நில அலுவலகம் (PDT), குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்துறை (JPS), நிலம் மற்றும் வெள்ள முகப்பு அலுவலகம் (PLB), எம்பி இங்க் (MB Inc) மற்றும் உள்ளூர் வாசிகள் ஆகியோருடன் பார்வையிட்ட பிறகு ந்டத்தப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக, முக்கியமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அருகிலுள்ள காடுகளை நீர்தேக்கமாக மாற்றுவதற்கான சுத்திகரிப்பு மற்றும் நன்னீர் ஆற்றான “சுங்கை ஐர் ஹிடாம்” வரை பாரிட்கள் சுத்தம் செய்யப்படுதல் ஆகியவை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் பத்து காஜா மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் வழியாக செய்யப்பட்டன.
மேலும், சுங்கை ஐர் ஹிடாமில் இருந்து சுங்கை கிந்தா வரை நீர்நிலையை வழிநடத்தும் டிரெயினேஜ் (longkang outlet) பணிகள், ஒரு குவாரி நிறுவனத்தின் சமூக பொறுப்பின் (CSR) ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பிற்கும் நலனுக்குமாக அமைகின்றன.
தளத்துக்கு வந்திருந்தவர்களில், தஞ்சோங் துவாலாங் முகிம் பங்குத் தலைவர் திரு முக்தார் முஸ்தப்பா, PLB-இன் பிரதிநிதி திரு இப்ராகிம் மற்றும் கம்போங் சிக், தஞ்சோங் துவாலாஙை சேர்ந்த திரு ஹர்ஜித் சிங் ஆகியோரும் இருந்தனர்.
இந்த நேரத்தில், எதிர்காலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் நீண்டகால தீர்வுகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
“மக்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் நாங்கள் முன்னிலைப்படுத்தும் முக்கியத்துவம். தஞ்சோங் துவாலாங் முகிம் மற்றும் மாளிம் நாவர் தொகுதி மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படும் அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்,” என யே.பி. பவானி சாஷா அவர்கள் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுகளை வழங்கும் முயற்சியில் தொடர்ந்த ஒத்துழைப்புக்கும் அர்ப்பணிப்பிற்கும் பத்து காஜா மாவட்ட ஆட்சியருக்கு யே.பி. பவானி சாஷா அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

