
மஇகாவின் மூலம் அமைச்சர், துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலப் பொறுப்புகளை வகித்து, மஇகாவில் படிப்படியாக முன்னேறி, இறுதியில் கட்சியின் 8-வது தேசியத் தலைவராகவும் துன் ச.சாமிவேலுவுக்குப் பின்னர் பதவியேற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்கள் காலமானது குறித்து என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் அவருடன் இணைந்து அரசியல் பயணத்தில் பாடுபட்ட பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும், மஇகா உறுப்பினர்களுக்கும் என் இரங்கலைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் நானும் பழனிவேலுவுடன் இணைந்து கட்சிப் பணிகளில் நிறைய அளவில் பாடுபட்டவன் என்ற முறையில் அவருடன் பழகிய இனிய நினைவுகள் இப்போது என் நெஞ்சில் அலைமோதுகின்றன.
அவரின் இறுதிக் காலத்தில் அவரின் உடல் நலக் குறைவினால் அவருடனான தொடர்புகள் பெருமளவில் குறைந்துவிட்டன என்றாலும் அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளையும் – எனக்கும் சில அரசியல் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர் அவர் – என்ற முறையிலும் அவரின் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை.
பல்கலைக் கழகப் பட்டதாரியாக, முதலில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் ஆய்வு அதிகாரியாகவும் பின்னர் பெர்னாமா நிறுவனத்தின் பத்திரிகையாளராகவும் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவரின் ஊடக வியூக ஆற்றலும், அரசியல் வியூகங்களும் அமரர் துன் சாமிவேலுவைக் கவரவே, அவரைத் தன் ஊடகச் செயலாளராக நியமித்துக் கொண்டார்.
கால ஓட்டத்தில், மூன்று தவணைகளுக்கு உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர், பின்னர் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற செயலாளர், மகளிர் மேம்பாடு, பிரதமர் துறை, தோட்டத்துறை மூலத் தொழில் ஆகிய துறைகளில் துணையமைச்சர் போன்ற பல பொறுப்புகளையும்அரசாங்கத்தில் திறம்பட வகித்த பழனிவேல், இயற்கை எரிவாயு ஆற்றல் அமைச்சராகவும் பணியாற்றினார்.
கட்சியிலும் துன் அவர்களின் ஆதரவுடன் படிப்படியாக முன்னேறத் தொடங்கினார். சிலாங்கூர் மாநிலத் தலைவர், தேசியப் பொருளாளர், தேசிய உதவித் தலைவர், தேசியத் துணைத் தலைவர் ஆகிய கட்சிப் பொறுப்பகளை வகித்த பழனிவேல்
திறமை, உழைப்பு, ஆகியவை ஒருங்கிணைந்து கட்சிக்கும் கட்சித் தலைமைத்துவத்திற்கும் என்றும் விசுவாசமாக இருந்தால், யாராக இருந்தாலும், எந்த அரசியல் பின்புலமுமின்றி கட்சியின் தேசியத் தலைவராகவே திகழ்ந்தவர் பழனிவேல்.
துன் சாமிவேலு அவர்கள் பதவி விலகும் தருணம் வந்தபோது, அவரே தனக்கு வாரிசாக அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர் பழனிவேல். துன் அவர்களுக்குப் பின் தேசியத் தலைவரானதும், 13-வது பொதுத் தேர்தலில் மஇகாவை வழிநடத்திய அவர், தனக்கே உரிய பாணியில் சில முன்னேற்றங்களை கட்சிக்குக் கொண்டு வந்தார், தன் பதவிக் காலத்தில் கட்சியை இயன்றவரையில் சிறப்பாக வழி நடத்தினார் என்பதை மறுப்பதற்கில்லை.
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியுறவும் அனைவருடன் இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன்.
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்

