நாடு ஒரு சிறந்த கல்விமானை இழந்து விட்டது: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர்:

நாடு ஒரு மிகச் சிறந்த கல்விமானை இழந்து விட்டது என டான்ஶ்ரீ தம்பிராஜா மறைவிற்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரை தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தோற்றுநரும் கல்வியாளருமான டான்ஶ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா இன்று காலமானார்.

டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் டான்ஶ்ரீ தம்பிராஜாவின் இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

இறுதி மரியாதை செலுத்திய அவர் கூறியதாவது,

கல்வி, ஆன்மிகம் வாயிலாக இந்திய சமுதாயத்தை உயர்த்த முடியும் என்ற தூரநோக்கு சிந்தனையில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை தோற்றுவித்தவர் டான்ஶ்ரீ தம்பிராஜா.

இந்த கல்வி நிலையத்தின் வாயிலாக கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்திடையே மிகப் பெரிய கல்வி புரட்சியை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு வீடும் ஒரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்பது அவரது தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. அது ஒரு தலைமுறையை அணி திரட்டிய ஒரு மாபெரும் பணியாகும்.

கல்வியின் சக்தியில் அயராத அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை மூலம் அவர் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தார்.

இதன் மூலம் 50,000த்திற்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி அவர் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளார்.

அறிஞர், கல்வியாளர், கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த டான் ஸ்ரீ தம்பிராஜா முன்மாதிரியாக வாழ்ந்தார்.

அதே வேளையில் கடந்த 1979ஆம் ஆண்டு ‘வரலாற்றில் மலேசியா’ (Malaysia Dalam Sejarah) எனும் நூலை எழுதினார். இந்த நூல் இடைநிலைப்பள்ளி வரலாற்றுப் பாடநூலாக பயன்படுத்தப்பட்டது.

இப்படி கல்வியில் ஒரு தந்தையாக விளங்கிய டான்ஶ்ரீ தம்பிராஜா மறைவு நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பு என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles