
ஈப்போ, ஜுன்.25: இந்நாட்டில் மீண்டும் யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் மலர வேண்டும். தற்போது இந்த இரு தேர்வுகள் இல்லாமையால் ஆரம்ப கல்வியை தொடரும் மாணவர்களின் கல்விநிலைப்பாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
அதே நிலைப்பாடு படிவம் 1,2 மற்றும் 3 ல் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் சரிவு கண்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு இந்த இரு தேர்வுகளும் மீண்டும் அமலாக்கம் செய்யும்படி இ.டபள்யூ.ஆர்.எப் கோரிக்கை மனுவை கல்வி அமைச்சுக்கு வைப்பதாக இதன் தலைவர் முத்தமிழ்செல்வன் ஆறுமுகம் கூறினார்.
அத்துடன், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் ஆளுமை பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இதுவரை திட்டமிட்டு செயல்படுவதாகவும், இத்தகைய கல்வி்தொடர்பான செயல்நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் உறுதியுடன் சொன்னார்.
தற்போது இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்க பல செயல்நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வருகின்றனர். குறிப்பாக, இங்குள்ள மாணவர்கள் கட்டொழுங்குடன் செயல்படவும் உதவிகரம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1978 ம் ஆண்டில் தான்ஸ்ரீ மாரிமுத்துவால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு நாடு முழுவதுமுள்ள இந்திய மாணவர்கள் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகம் செல்வதை உறுதி்செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இது தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த 42 வது பொதுக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துக்கொண்டு கருத்து பரிமாற்றம் செய்தனர். அத்துடன், பிரதான இயக்கங்கள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு குறித்து திட்டங்கள் வரையறுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கனும், சுங்கை சிப்புட் பிகேஆர் தொகுதித்தலைவர் நோவிந்தன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

