
ஈப்போ, ஜுன்.26: இங்குள்ள தாமான் தாசேக் குடியிருப்பு பகுதியில் சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 57 வயது தந்தையை மகன் கொன்றிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் 31 வயது மகனை சந்தேக அடிப்படையில் போலீசார் கைது செய்தனர் என்று ஈப்போ மாவட்ட போலீஸ்படை தலைவர் துணை கமிஷனர் அபாங் ஜைனல் அமிடின் அபாங் அமாட் கூறினார்.
விசாரணை செய்யும் பொருட்டு சந்தேகப்பேர்வழியை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் செக்ஷன் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட வீட்டில் சிசிடிவி வேலை செய்யவில்லை, வீட்டில் எந்த பொருளும் காணமல் போகவில்லை. அத்துடன், சந்தேகப்பேர்வழியும் இறந்தவரும் ஒன்றாக இவ்வீட்டில் தங்கி வந்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து இரவு 8.20 மணிக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
தமது தந்தை மதியம் 2.40 மணிக்குதான் தாம் அனுப்பிய குறுந்நகவலை பார்த்துள்ளார். அதோடு மாலை 7.30 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் கேட் மூடப்பட்டிருந்தது. அத்துடன், ஜன்னல்கள் திறந்து கிடந்தன. நாற்காலி் சோபா மேசைகள் அலங்கோலமாக இருந்தது. சமையல் அறையில் சென்று காணும் பொழுது தம் அப்பா ரத்த வெள்ளத்தில் இருந்ததாக அவர் மகன் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்யும் பொருட்டு 22 சென்டிமீட்டர் கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கொலைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு சந்தேகப்பேர்வழியின் கைத்தொலைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், காரினுள் இருந்த காமிரா சிசிடிவி பதிவு போன்ற உபகரணங்களையும் விசாரணைக்காக போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் சொன்னார்.

