
ஈப்போ, ஜுன்.26: எதிர்வரும் 29.6.2025( ஞாயிற்றுக்கிழமை) ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஆண்டுக்கூட்டமும், தேர்தலும் நடைபெறவுள்ளது என்று தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எம். மதியழகன் கூறினார்.
கடந்த 22.6.2025( ஞாயிற்றுக்கிழமை) இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சிறப்பாக நடந்தேறியது. அதில் துணைச்செயலாளர், பொருளாளர் மற்றும் இரு யாழ்பாண பிரதிநிதிகள் தேர்தலில் எந்தவொரு போட்டியும் இடம்பெறவில்லை. ஆகையால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி வெற்றிப் பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று 25.6.2025( புதன்கிழமை) இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெறும் நாளாகும். மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை ஈப்போ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணிமனையில் வேட்பாளர்கள் வாபஸ் பாரம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், இறுதி வரை யாரும் வாபஸ் பெறவில்லை என்று அவர் சொன்னார்.
ஆகையால், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தேர்தல் வரும் 29.6.2025( ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.00 மணி முதல் 2.00 வரை புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார்.
இம்முறை தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் செயற்குழுவினர் பதவிகளுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

